இறங்கி வருகிறார் எடப்பாடி ஒன்றிணைகிறது அதிமுக

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக இரண்டாக உடைந்தது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு பொதுக்குழுவைக் கூட்டிய அவர், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கினார்.

அதன்பின்னான எல்லாத் தேர்தல்களிலும் அதிமுக தோல்வியடைந்து வருகிறது.

இப்போது ஓ.பன்னீர்செல்வம் அதிமுக உரிமை மீட்புக் குழு எனத் தொடங்கி அதனை நடத்தி வருகிறார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கையும் விடுத்து வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்பட மாட்டார்கள் என உறுதிபடக் கூறி வருகிறார்.

இதற்கிடையே, பாஜக மேலிடம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்ளிட்ட 6 பேர், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் வலியுறுத்தினர்.இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. மாவட்ட வாரியாக எடப்பாடி நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்திலும் மாவட்ட நிர்வாகிகள் அதிமுக ஒன்றிணையவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் சேர்க்கப்பட உள்ளதாக புதுத்தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுரித்து அதிமுக வட்டாரங்களில் கூறப்படுவதாவது…

எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற பிறகு அதிமுக தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது. இதேநிலை நீடித்தால் கட்சி காணாமல் போய்விடும் என்ற கருத்து நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நிர்வாகிகள் விரும்புகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியுடன் நெருக்கமாக இருப்பவர்களும், ஒன்றாக இணைய வேண்டும் என வலியுறுத்தி உள்ளதால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரைச் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் தனிக்கட்சி வைத்திருக்கிறார். அவரை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது போன்ற கருத்துகள் ஏற்பட்டுள்ளது.இதுபற்றி தொடர்ந்து மேல்மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூடிய விரையில் அனைவரும் ஒன்றாக இணைவோம்

என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

Leave a Response