விவசாயத்தில் ஈடுபாடு ஏற்பட்டு, முழுமையாக அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் நடிகர் கார்த்தி. ‘உழவன் ஃபவுண்டேசன்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறார்.
தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள்’ வரைவுக்கு கார்த்தி தனது எதிர்ப்பைப்பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக உழவன் ஃபவுண்டேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…..
“நாடென்ப நாடா வளத்தன நடல்ல
நாட வளந்தரு நாடு
-குறள் 739
“முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல”
மேற்கண்ட குறளுக்கு ஏற்ப பல வளங்களை உடைய மிகச்சிறந்த நாடாக உலக நாடுகள் போற்றும் நம் இந்தியாவில், இப்பொழுது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்கள், நம் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கப் போதுமானதாக இல்லை.
ஆனால், தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020’ வரைவு (Environmental Impact Assessment – EIA 2020) நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.
மலைகளும், ஆறுகளும் பல்வகை உயிரினங்களுமே நம் வாழ்விற்கு ஆதாரமானவை. மரங்களையும், விவசாய நிலங்களையும் அழித்து நெடுஞ்சாலைகள் போடுவது, இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பதும் நிச்சயம் வளர்ச்சி அல்ல. இயற்கை வளங்களை அழித்து, அதை வளர்ச்சியின் அடையாளமாகக் காட்டுவது வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கும் முயற்சி. அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
இந்த வரைவு அறிக்கையில், “பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்துக் கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம்” என்கிற ஒரு சரத்தே, நம் உள்ளத்தில் மிகப் பெரிய அவநம்பிக்கையையும் அச்சத்தையும் உருவாக்குகிறது.
நம்முடைய சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது எந்த வகையில் நியாயமான ஒரு சட்டமாக இருக்கும்?
மேலும் தொழிற்சாலைகள் வகைப்பாடு மாற்றம், பழைய விதி மீறல்களுக்கு பிந்தைய உண்மை (Post Facts) மக்கள் கருத்து பதிவுக்கான நாட்களைக் குறைப்பது போன்ற சரத்துகளும் நம்மை அச்சுறுத்துகின்றன. குமரி முதல் காஷ்மீர் வரையிலுமான சட்டம் என்ற போதும், இந்த வரைவறிக்கை வெறும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. தமது தாய்மொழி மட்டுமே அறிந்த கோடிக்கணக்கான மக்கள் இந்த கொள்கைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா?
நாட்டிற்கான முன்னேற்றங்கள் தேவை என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், கோவிட் – 19 எனும் அரக்கப் பிடியில் நாம் அனைவரும் சிக்கி, மீள போராடிக் கொண்டிருக்கும் இந்த வேலையில், நம்முடைய வாழ்வாதாரத்தையும், முக்கியமாக நமது வரும் சந்ததியினரின் வாழ்வையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியுள்ள இந்தச்சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்?
எனவே, இந்த வரைவு அறிக்கையின் சாதக பாதக அம்சங்களை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்து, பொது விவாதமாக்கி அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை நாம் நிச்சயமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
eia2020-moefcc@gov.in என்கிற மின்னஞ்சல் முகவரியில், ஆகஸ்ட் 11, 2020 தேதிக்குள் நம் கருத்துகளைப் பதிவு செய்வோம்.
அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டுமென மக்களில் ஒருவனாகக் கேட்டுக் கொள்கிறேன்”
இவ்வாறு நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.