அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா – பதட்டத்தில் மேலும் இரு அமைச்சர்கள்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்துவந்த நிலையில், 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சரை கொரோனா தடுப்புப் பணிகளில் நியமித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டார். இந்தப் பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதும் நிவாரண உதவிகள் செய்வதுமாக இருந்துவந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அமைச்சர் கே.பி.அன்பழகன் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அவருக்குக் காய்ச்சல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே, நேற்று காலை அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், தனக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை, நல்ல உடல்நலத்துடன் வீட்டில்தான் இருக்கிறேன் என விளக்கம் அளித்தார் அமைச்சர்.

இந்த நிலையில், தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதுசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருப்பதால், வீட்டுக்குச் சென்று தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறலாம் என மருத்துவமனை நிர்வாகம் கேட்டுகொண்டபோதும், மருத்துவமனையிலே தங்கி சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவரது கார் ஓட்டுநர், குடும்பத்தினர் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கலந்துகொண்டார் என்பதும் அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் அமைச்சர் அன்பழகனுக்குத் தொற்று உறுதியானதால் மற்ற இரு அமைச்சர்களும் பதட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response