67 உழவர்களின் உயிரீகத்தில் கிடைத்த உரிமையை பறிக்கும் பாஜக – போராட சீமான் அழைப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,……

பேரன்புகொண்டு நேசிக்கின்ற உறவுகள் அனைவருக்கும் எனது அன்பு நிறைந்த வணக்கம்!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை

தமிழ்மறையோன் வள்ளுவப்பெருமகனார் தந்தருளிய மறைமொழியில் உழவாண்மையின் சிறப்பையும், மேன்மையையும், பெருமையையும் இவ்வாறு போற்றிப்புகழ்கிறார். உழவு இல்லையென்றால், உணவு இல்லை! உணவு இல்லையென்றால், உயிர்கள் இல்லை! உயிர்கள் இல்லையென்றால், உலகு இல்லை! எனவேதான், உழவை மீட்போம்! உலகை காப்போம்! என்ற பெருமுழக்கத்தை முன்வைத்து தொன்றுதொட்ட நமது பாரம்பரிய வேளாண்மையை மீட்டெடுக்க ஒரு புரட்சியை முன்னெடுத்து வருகிறோம்.

வேளாண் குடிமக்கள் யாவரும் இன்று எவ்வளவு துயரத்துன்பத்திற்கு ஆட்படுகிறார்கள் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். ஒரு நாட்டில் ஒரு உழவர் குடிமகன் வாழ்கிறானென்றால், அந்நாடும் வாழ்கிறது; வளர்கிறது என்று பொருள். உழவர்கள் வாழ முடியாது உயிர் இழக்கிறார்களென்றால் அத்தகைய நாடு நாடே அல்ல; சுடுகாடு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு வேளாண்குடிமகன் மரணிப்பது இன்று நமக்குச் செய்தியாக இருக்கலாம்.

ஆனால், அது நாளை நாம் உணவின்றி பட்டினிக்கிடந்து சாகப்போகிறோம் என்பதற்கான முன்னறிவிப்பு என்பதை மனதில் கொள்ள வேண்டும். உலகில் வேளாண்மையைக் கைவிட்ட எல்லா நாடுகளும் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கின்றன. வேளாண்மை என்பது வெறுமனே ஒரு தொழிலல்ல; அது நம் பண்பாடு, வாழ்வியல் முறை.

அத்தகைய வேளாண்மை செழித்து வளர்ந்தோங்குவதற்கு, வேளாண் குடிமக்கள் வாழ்வதற்குப் பல போராட்டங்களை நம்மின முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். பாசனத்திற்குப் பயன்படுத்துகிற நீரினைப்பெற தேவையான மின்சாரத்திற்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்கிற கோரிக்கையை வலியுறுத்தி எண்ணற்ற வேளாண் குடிமக்கள் போராடியிருக்கிறார்கள்.

கட்டணம் இல்லாத மின்சாரத்தைப் பெறுவதற்கு ஒட்டுமொத்தமாக 67 வேளாண் குடிமக்களின் உயிர்களை நாம் ஈகம் செய்துள்ளோம். அவர்களினுடைய உயிர் ஈகத்தின் பயனாகத்தான் கட்டணமில்லா மின்சாரத்தைப் பெற்று ஓரளவுக்கேனும் நம்முடைய வேளாண் குடிமக்கள் வேளாண் தொழிலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பமைந்தது.

இன்று மத்தியில் அமைந்திருக்கும் பாஜக அரசு, ‘புதிய மின் அலகு திட்டம்’ என்ற ஒன்றை கொண்டுவந்து அதையும் பறிப்பதற்கு வேலை நடக்கிறது. நாம் அதற்கெதிராக நம் முன்னார்களைப் போல மாபெரும் மக்கள் புரட்சிக்கு அணியமாக வேண்டும் என்பதுதான் உயிர்த்தியாகத்தின் மூலம் உழவுக்குக் கட்டணமில்லா மின்சாரத்தைப் பெற்றுக்கொடுத்த நம் முன்னோர்களின் நினைவைப் போற்றுகிற இந்நாளில் ஏற்க வேண்டிய உறுதிமொழியாகும்.

ஆகவே, கட்டணமில்லா மின்சாரத்தை உழவுக்குப் பெற்றுக் கொடுத்த உழவர் பெருங்குடி ஈகியர் மீது உறுதியேற்று அவ்வுரிமையைப் பறிக்க முயலும் பாஜக அரசின் சதிச்செயலை முறியடித்திட உறுதியேற்போம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response