செங்கோட்டையன் ஜெயக்குமார் அதிருப்தி – அதிமுக பரபரப்பு

2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் வகையில், மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ளது.இதனால், அதிமுகவை பாஜக மிரட்டிப் பணிய வைத்துள்ளது என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சூழ்நிலையில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் பாஜக கூட்டணிக்கு எதிராக மிகக் கடுமையாகப் பேசி வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த சில நாட்களாக மவுனமாக இருந்து வந்தார். இந்த நிலையில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை நேற்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படத்தை தவிர்த்துள்ளது அதிமுகவினர் மத்தியில் சர்ச்சையாக வெடித்துள்ளது.

அதிமுக- பாஜக கூட்டணி அறிவிப்புக்குப் பின்னர் முதல் முறையாக சமூகவலைதளத்தில் ஜெயக்குமார் தலைகாட்டியதால், கடந்த 4 நாட்களாக எங்க சார் போனீங்க என சரமாரியாக கேள்வி கேட்டு பதிவுகளை போட்டும் வருகின்றனர். ஒரு சிலர், எங்க சார்… எடப்பாடியார் படம் மிஸ்ஸிங் என கவனமாகவும் கேள்வி கேட்டிருக்கின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

பாஜக கூட்டணி அமைந்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக நான் சொல்லவில்லை. நான் பதவியை விட்டு விலகுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான செய்தி. நான் அப்படி எந்த நேரத்திலும் சொல்லவில்லை. நான் சொல்லாத ஒரு செய்தியை வேண்டும் என்று கடந்த 4 நாட்களாக சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். அதை பார்த்து மீம்ஸ் போடுவதுமாக இருக்கின்றனர். என்னால் அந்த யூடியூப் சேனலுக்கும் வருமானம் கிடைக்கும் என்றால் மகிழ்ச்சி தான்.
நீண்ட நெடிய திராவிட பாரம்பரிய குடும்பத்தில் வளர்ந்தவன் நான். பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றதும் கிடையாது. தன்மானத்தோடு இருந்த என்னை அதிமுக அடையாளம் காட்டியது. பாஜக உடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை. அதிமுக தான் எனது உயிர் மூச்சு. ஜெயலலிதா வழியில் எனது அரசியல் பயணம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது அதிமுகவினர் மத்தியில் ஓரளவு நிம்மதியை தந்துள்ளது. அதேநேரம், பாஜக கூட்டணியை அவர் இதுவரை ஆதரித்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அவர் அதிருப்தியில் இருப்பதை அவர் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அதேபோல் இன்னொரு முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன், பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி அத்திகடவு-அவினாசி திட்ட விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவைப் புறக்கணித்ததைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் வெளிப்படையானது. அதைத்தொடர்ந்து செங்கோட்டையன் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எடப்பாடி புகைப்படத்திற்கு இணையாக செங்கோட்டையன் படமும் இடம் பிடித்தது.

எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், அவரது 4 ஆண்டு கால ஆட்சி குறித்தும் பேசுவதைத் தவிர்த்து வந்தார். எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் பொதுச்செயலாளர் என்று மட்டும் பேசி வந்தார். இந்நிலையில் நேற்று கோபியில் நடைபெற்ற தனியார்நிறுவன துவக்க விழாவில் கலந்துகொண்ட கே.ஏ.செங்கோட்டையன், பேசுகையில்,

சிறந்த கல்வியைத் தரக்கூடிய ஆண்டாக, அனைவரும் மகிழ்ச்சியோடு வாழுகிற ஆண்டாக இந்த தமிழ்ப்புத்தாண்டு ஆண்டு அமைந்திட வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் சிறந்த முறையில் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் முனைப்பாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

நேற்று தனியார் கல்வி நிறுவன ஆண்டு விழாவில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் பேசுவதைத் தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர்கள் இருவர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response