அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள் – அதிமுகவினர் அச்சம்

அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு அதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்துவருகின்றன.

காரைக்காலைச் சேர்ந்தவர் கேஏயு.அசனா. அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவர், காரைக்கால் மாவட்ட இணைச் செயலாளராக இருந்தார். இந்நிலையில், தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக ஏப்ரல் 12 அன்று அறிவித்தார்.

இதுகுறித்து காரைக்காலில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதவது….

2016 இல் அதிமுக சார்பில் தனித்துப் போட்டியிட்டு காரைக்கால் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றேன். ஆனால், 2021 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டதால் வெற்றி வாய்ப்பை இழந்தேன். தமிழகத்திலும் அதிமுக தோல்வியடைந்த நிலையில், அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடன் அமைத்த கூட்டணிதான் காரணம் என்றும், இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் அறிவித்தார் எடப்பாடி. மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தபோதும், சிறுபான்மை மக்களுடன் துணையாக நின்று 2029 மக்களவைத் தேர்தலைச் சந்திப்போம் என்றார். ஆனால், தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

இது, சிறுபான்மை மக்களை வேதனையடையச் செய்துள்ளது. எனவே, நான் அதிமுகவில் இருந்து விலகிக் கொள்கிறேன். அடுத்தகட்ட முடிவு குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றார்.

அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் கே.எஸ்.முகமதுகனி. அதிமுக சிறுபான்மை பிரிவு நகரச் செயலாளர். அதிமுக, பாஜவுடன் கூட்டணி வைத்து இருப்பதை ஏற்க மறுத்து, முகமது கனி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.

அதற்கான கடிதத்தை அக்கட்சியின் மாவட்டச் செயலர் முன்னாள் அமைச்சர் விஜபாஸ்கருக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்ததோடு தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல், தமிழக வளர்ச்சிக்கு எதிராக பல்வேறு சட்டங்களை கொண்டு வந்த பாஜவோடு அதிமுக கூட்டணி வைத்ததில் உடன்பாடு இல்லாததால் ராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படி அடுத்தடுத்து அதிமுக நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவதால் கட்சியில் இருக்கும் அதிமுகவினர் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave a Response