நாகப்பட்டினத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 30 ஆவது தேசிய மாநாடு இன்று (ஏப்ரல் 15,2025) தொடங்கி 17 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
மாநாட்டுப் பணிகளை நேற்று பார்வையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் தமிழ்நாடு செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி….
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இருந்தே பாஜகவுடன் எக்காலத்திலும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, கூட்டணி வைக்கப் போவதும் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கூறிவந்தனர். ஆனால் திடீரென பாஜகவுடன் கூட்டணி அனைத்தால் தான் மக்களுக்கு எதையும் செய்ய முடியும். அதனால் என்ன விளைவுகள் வந்தாலும் அதை எதிர்கொள்வோம் என எடப்பாடி கூறுகிறார். எடப்பாடி நிர்பந்தம் காரணமாகவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.
அமலாக்கத்துறை சோதனைக்குப் பயந்த காரணத்தால் எடப்பாடி பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்த சரத்பவர் கட்சி, சிவசேனா கட்சியின் நிலை என்ன ஆனது. பாஜக தன்னுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியை நயவஞ்சமாக அழித்துவிடும்.
தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் ஒன்றிய அரசை தமிழக மக்களே எதிர்க்கின்றனர். பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தை காட்டிக் கொடுத்த எட்டப்பன் ஆகிவிட்டார் எடப்பாடி.
ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் நிருபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலிதாவின் ஊழல் குறித்து அண்ணாமலை பேசினார். இன்று கூட்டணி வைத்துள்ள காரணத்தால் அதிமுகவினர் ஊழல் செய்யவில்லை எனப் பேசுவார்களா? அதிமுக போன்ற கரை படிந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, ஊழல் பற்றி பேச ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தகுதியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.