படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களைக் கைவிட்டது ஏன்? – சீமான் சீற்றம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,,

கடலுக்கு மீன்பிடித்தொழிலுக்குச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 3 பேர் இன்னும் கரைதிரும்பாத செய்தி பெருந்துயரத்தையும், கவலையையும் தருகிறது.

கடந்த சூன் 13 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற அவர்களது படகு நடுக்கடலில் கவிழ்ந்ததன் காரணமாக அதிலிருந்த மீனவர்கள் 4 பேரும் நடுக்கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர். அவர்களில் ஜேசு என்கிற மீனவர் மட்டுமா நீந்தியே, கோட்டைப் பட்டினம் வந்தடைந்து, தற்போது கோட்டைப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவருடன் சென்ற மற்ற மூன்று மீனவர்களான மணிவண்ணன், ரெஜின் பாஸ்கர், சுஜித் ஆகியோரின் நிலை குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் இல்லை. இதனால், அவர்களது குடும்பம் பெருங்கவலையில் ஆழ்ந்துள்ளது.

காணாமல் போன மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கத்தரக் கோரி கடலோரக்காவல்துறை அதிகாரிகளிடமும், மீன்வளத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் இதுவரை பலமுறை கோரிக்கை மனு அளித்தும், நேரில் சென்று முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து மீனவர்களது உறவினர்களும், பல்வேறு மீனவ அமைப்புகளும சேர்ந்து முற்றுகைப்போராட்டம் நடத்தியதையடுத்து தேடிக்கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதே தவிர, இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

மீனவர்கள் தாங்களே தன்னார்வத்தோடு தேடும் பணியைத் தொடர விருப்பம் தெரிவித்தபோதும் தேடுதலுக்குரிய ஆணைக் கடிதத்தையும் அதிகாரிகள் வழங்க மறுப்பதாகத் தெரிய வருகிறது.

தேடுதலுக்குரிய அனுமதிக் கடிதம் இருந்தால்தான் எல்லைத்தாண்டி தேடும் பணியில் ஈடுபட முடியும் என்பதால் அவ்வாய்ப்பும் மறுக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, காணாமல்போன மூன்று இராமேஸ்வரம் மீனவர்களையும் விரைந்து மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேடும் பணியில் ஈடுபட விரும்பும் மீனவர்களுக்கு உரிய அனுமதிக் கடிதம் வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அதனைச் செய்யத்தவறி, மீனவர்களை மீட்பதில் இனியும் காலதாமதம் செய்தால் நாம் தமிழர் கட்சி வலிமையான போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response