சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்துக்குப் பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது….
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் பின்வருமாறு:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள, பாஜகவின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அதிமுக மீதும், எங்களுடைய கட்சியின் தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.
மேலும், பாஜகவின் மாநிலத் தலைமை கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தும் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழகத்தின் எம்ஜிஆர் மாளிகையில் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல் பாஜக கூட்டணியிலிருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
2024 இல், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், மற்ற கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலைச் சந்திக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.
ஏகமனதாகத் தீர்மானம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் அப்படி இல்லையாம். பாஜக கூட்டணியிலிருந்து விலக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்களாம்.சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். கலந்து கொண்ட பெரும்பாலோனோர் எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதி காத்துள்ளனர்.
கடைசியாக இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்ட பின்னரும் இது தற்காலிகம்தான் என்று அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.