வந்தே பாரத் விரைவு வண்டி என அழைக்கப்படுகின்ற புதிய தொடர்வண்டிச் சேவையை 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் தொடங்கியது மோடி அரசு. புது தில்லியில் தொடங்கிய அச்சேவை ஒன்றியம் முழுதும் பரவலாக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலும் சென்னை திருநெல்வேலி இடையே அச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சேவையை ஒரு சாதனையாக ஆளும்கட்சியினர் சொல்லிவருகிறார்கள்.
திமுக பாராளூமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, இச்சேவையைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவருடைய பதிவில்….
புதிய வந்தேபாரத் ரயிலுக்காக எனக்கு நன்றி தெரிவித்துள்ளனர் சில நண்பர்கள்.ரயில்வேத்துறைக்காக அதிகம் கோரிக்கைகள் வைத்து நாடாளுமன்றத்தில் பேசுபவன், கடிதங்கள் எழுதுபவன் என்பதால் வந்தே பாரத் ரயிலுக்கும் நான் முயற்சி செய்து இருப்பேன் என நினைத்து ஒருவேளை எனக்கு நன்றி தெரிவித்து இருக்கலாம்!
உண்மையில் வந்தேபாரத் ரயில் வந்ததற்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
அதற்காக நான் நாடாளுமன்றத்தில் பேசியதும் இல்லை. அமைச்சர், ரயில்வே வாரியத் தலைவர் உள்ளிட்ட யாருக்கும் கடிதம் அனுப்பவும் இல்லை.
வெகுஜன மக்கள் பயணிக்க முடியாத உயர் வகுப்பினருக்காக மட்டுமே இயக்கப்படும் ரயில் அது.எனவே பெரும்பான்மையினருக்குப் பயனில்லாத அந்த இத்துப்போன பாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
நாளைக்கு அம்பானிக்கோ அதானிக்கோ சலுகை விலையில் விற்பதற்காக இன்றே ஓட்டப்படும் ஹைகிளாஸ் ரயில்தான் வந்தேபாரத்!
நன்றி
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவருடைய இந்தப் பதிவுக்குப் பல்லாயிரக்கணக்கானோர் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.