நள்ளிரவில் நாடாளுமன்றத்தைக் கலைத்த கோத்தபய – தேர்தல் அறிவிப்பு

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தை இன்னும் 6 மாதங்கள் பதவிக்காலம் இருக்கும் நிலையில், சிங்கள அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று அதிரடியாகக் கலைத்தார். அங்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது.

இலங்கையில் 2019 நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் அதிபரும், தனது சகோதரருமான மகிந்த ராஜபக்சேவை அவர் நியமித்தார்.

கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றவுடனே, இலங்கை நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4½ ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்யும் வரை கலைக்க முடியாது என்பதால், இந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நேற்று முன்தினம் 4½ ஆண்டுகளை எட்டியது. இதையொட்டி நாடாளுமன்றக் கலைப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இதை பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக கடந்த 29 ஆம் தேதி அவர் கூறுகையில், ‘இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் அனுமதிக்காததால், அரசுக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே அதிபர் தனது அரசியல்சாசன அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைப்பார்’ எனத் தெரிவித்தார்.

அதன்படி இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதற்கான ஆணையில் நேற்று இரவு அவர் கையெழுத்துப் போட்டார்.

அத்துடன் புதிய தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதன்படி இலங்கையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 25 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Leave a Response