தடை மீறி பேரணி ஐநா அலுவலகத்தில் வாக்குவாதம் – தில்லியில் சீமான் உள்ளிட்டோர் அதிரடி

காசுமீரி தேசிய இன மக்களின் உரிமைகளை ஆதரித்து சீக்கியர்களும் தமிழர்களும் இணைந்து 26.09.2019 காலை புதுதில்லியில் நடத்தத் திட்டமிருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தில்லி காவல்துறை கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்தது.

இத்தடையை மீறுவது என்று முடிவு செய்த நிகழ்ச்சிக் குழுவினர் அகாலி தளம் (அமிர்தசரஸ்) தலைவர் சிம்ரஞ்சித் சிங் மாண் தலைமையில் சீக்கியர் கோயிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு நடுவண் தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றனர்.

ஐநூறுக்கும் மேற்பட்ட சீக்கியர்களும், தில்லி பகுதி நாம் தமிழர் கட்சியினர் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்டோரும் பங்கேற்ற இந்த எழுச்சிப் பேரணி, நடுவண் தலைமைச் செயலகத்திற்கு சற்று முன்னால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இப்பேரணியில், “தல் கல்சா” தில்லி தலைவர் கிரிப்பால் சிங் சீமா, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், தில்லி மனித உரிமை அமைப்புத் தலைவர் ஜக்மோகன், காசுமீர் மனித உரிமைச் செயல்பாட்டாளர் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி, நாம் தமிழர் கட்சி தில்லி பொறுப்பாளர்கள் செந்தில், செகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமூகத்திற்கான மாணவர்கள் (Students for Society), பஞ்சாப் சீக்கிய இளைஞர்கள் (Sikh Youth of Punjab), அரசியல் சிறைவாசிகள் விடுதலைக் குழு (Committee for the Release of Political Prisoners) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பினரும், காசுமீரி – நாகாலாந்து தேசிய இன மாணவர்களும் பேரணியில் பங்கு கொண்டனர்.

பிற்பகலில் பேரணியின் முடிவில், தில்லியிலுள்ள ஐ.நா. தகவல் தொடர்பு நடுவத்தில் ஐ.நா. தலைமைச் செயலாளருக்கான மனு அளிக்கப்பட்டது.

முதலில், ஆறு பிரதிநிதிகள் நேரில் வந்து சந்திக்கலாம் என்று அனுமதித்த ஐ.நா. தகவல் நடுவம், திடீரென்று பூட்டப்பட்டிருந்த அலுவலக வாசலுக்கு வெளியில் மனுவைப் பெற்றுக் கொள்ள கீழ்நிலை அலுவலர் ஒருவரை அனுப்பியது.

இதை ஏற்க மறுத்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜக்மோகன், கடுமையாக வாதிட்டார். பேராளர் குழுவை உள்ளே அனுமதிக்கவில்லையென்றால், எல்லோரும் அலுவலக வாயிலிலேயே அமர்ந்து மறியல் செய்வோம் என்று அறிவித்தார். அதன்பிறகு, ஐந்து பேரை அனுமதிப்பது என்று ஏற்றுக் கொண்டார்கள்.

சிம்ரஞ்சித் சிங் மாண் தலைமையில், “தல் கல்சா” தில்லி தலைவர் கிரிப்பால் சிங் சீமா, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், காசுமீர் மனித உரிமைச் செயல்பாட்டாளர் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி ஆகியோர் சென்று ஐ.நா. தலைமைச் செயலாளருக்கான மனுவை தில்லி – ஐ.நா. தகவல் நடுவத் தலைமை அதிகாரி இராஜீவ் சந்திரசேகரிடம் அளித்து மனு குறித்து விளக்கமளித்தனர்.

ஐ.நா. மன்றத்தில் 1948 இல் இந்திய அரசு ஏற்றுக்கொண்ட அடிப்படையில், காசுமீரி மக்களிடையே அவர்களது அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து வாக்கெடுப்பு (Plebiscite) நடத்த வேண்டுமென்று சிம்ரஞ்சித் சிங் மாண் எடுத்துரைத்தார்.

அதற்கு மறுப்பு விளக்கமளித்த இராஜீவ் சந்திரசேகர், “1972 இல் இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான், இரு நாடுகளும் பேச வேண்டும்” என்றார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த சிம்ரஞ்சித் சிங் மாண், “வங்கதேச விடுதலையில் இந்தியா நேரடியாகத் தலையிட்டு அந்நாடு விடுதலை பெற்றபிறகு, படை வகையிலும் – பொருளியல் வகையிலும் – அரசியல் முனையிலும் பாக்கித்தான் பலவீனப்பட்டிருந்த நேரத்தில் செய்து கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தம் சமநிலையில் செய்யப்பட்ட ஒப்பந்தம் அல்ல. வார்சா ஒப்பந்தம் போல திணிக்கப்பட்ட ஒப்பந்தம்! வார்சா ஒப்பந்தத்திற்குப் பிறகு செர்மனி, பேராயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கியது. இதேநிலைதான், சிம்லா ஒப்பந்தத்திலும் இருக்கிறது” என்றார்.

அப்பொழுது குறுக்கிட்டுப் பேசிய கி.வெங்கட்ராமன், “இப்பிரச்சினையின் அடிப்படையான காசுமீரிகளையே ஈடுபடுத்தாமல், அவர்கள் கருத்து என்ன என்று கேட்காமல் இரண்டு ஆக்கிரமிப்பாளர்களான இந்தியாவும் பாக்கித்தானும் செய்து கொண்ட ஒப்பந்தம் எப்படி சர்வதேச நீதி வழங்கும்? ஐ.நா. பறைசாற்றல்கள் (Charters) கூறும் தேசிய இனங்களின் தன்னுரிமை (Right to Self Determination of Nationalities) என்ற அடிப்படையில்தான் ஐ.நா. மன்றம் இச்சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதுதான் எங்கள் மனுவில் கூறப்பட்டுள்ள செய்தி! உடனடியாக அங்கு நிலவும் நெஞ்சை நெறிக்கும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வர – சிறைபட்டுக் கிடக்கிற தலைவர்களையும், இளைஞர்களையும், குழந்தைகளையும் விடுதலை செய்ய – ஊடக சுதந்திரத்தை மீட்க – ஐ.நா. மன்றம் தலையிட வேண்டும் என்பதுதான் எங்கள் உடனடிக் கோரிக்கை” என்று விளக்கினார்.

இன்று (2019 செப்டம்பர் 27), ஐ.நா. பொது அவை கூடுவதால் (26.09.2019) மாலையே ஐ.நா. தலைமைச் செயலாளருக்கு உங்களுடைய மனு அனுப்பி வைக்கப்படும்” என்று இராஜீவ் உறுதியளித்தார். “நீங்கள் விளக்கிச் சொன்ன உணர்வுகளையும் ஐ.நா. தலைமையகத்துக்கு தெரிவிப்பேன்” என்று உறுதியளித்தார்.

Leave a Response