அரை மணி நேர இடைவெளியில் அதிமுகவினர் ஊர்வலம் – சென்னையில் பரபரப்பு

அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும் இருந்து வந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் உள்கட்சி குழப்பம் உருவாகி பல பிரிவுகள் ஏற்பட்டன.

தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர்.

இதேபோல், ஜெயலலிதாவின் உயிர்த்தோழியான சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற கட்சியையும், சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிட கழகம் என்ற கட்சியையும் தொடங்கியுள்ளனர்.

ஜெயலலிதாவின் 2 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (புதன்கிழமை) அ.தி.மு.க. சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே இருந்து காலை 9.30 மணிக்கு அமைதி ஊர்வலம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், அ.தி.மு.க பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இதேபோல், டி.டி.வி.தினகரனை துணைப் பொதுச்செயலாளராகக் கொண்டு இயங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பிலும் அதே அண்ணா சிலை அருகே இருந்து காலை 10 மணிக்கு அமைதி ஊர்வலம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரை மணி நேர இடைவெளியில் 2 கட்சிகளின் ஊர்வலமும் ஒரே இடத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய 2 கட்சிகளின் ஊர்வலமும் வாலாஜா சாலை வழியாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை சென்றடைகிறது. அங்கு இரு கட்சிகளின் நிர்வாகிகளும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.

இதனால், ஊர்வலப் பாதையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

மேலும், ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஜெ.தீபாவும், திவாகரனும் அவர்களது ஆதரவாளர்களுடன் வந்து அஞ்சலி செலுத்த இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Response