ஆசியக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி கடந்த 19-ம் தேதி நடந்தது. இந்தப் போட்டியில் களத்திலும், மைதானத்திலும் பல்வேறு உணர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தன.
அரசியல் ரீதியாக இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பிளவுபட்டு, நட்பு பாராட்டாமல் இருந்தாலும், விளையாட்டில் வீரர்கள் ஒருவொருக்கொருவர், ரசிகர்கள் எல்லைகள் கடந்த தங்களின் பேரன்பையும், நட்பையும் வெளிப்படுத்தினார்கள்.
அதில் குறிப்பாக பாகிஸ்தான் வீரர் உஸ்மான் கான் காலில் அணிந்திருந்த ஷூவின் லேஸ் அவிழ்ந்துவிடவே அதை இந்திய அணியின் யஜுவேந்திர சாஹல் கட்டிவிட்டார் இந்தப் புகைப்படம் அனைவராலும் ரசிக்கப்பட்டு, பாராட்டப்பட்டது. சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான அந்தப் போட்டியில் உச்சக் கட்ட உணர்ச்சிகர நிகழ்வாக, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், தனது தோளில் பாகிஸ்தான் தேசியக் கொடியை போர்த்திக் கொண்டு, இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கும் போது மிகுந்த மரியாதை அளித்து, தேசிய கீதத்தை பாடியதுதான் இன்னும் விளையாட்டில் இந்தியர்கள் பாகிஸ்தானியர்கள் வேறுபாடு மக்கள் மத்தியில் இல்லை என்பதைக் காட்டியது.
பாகிஸ்தான் ரசிகர் ஜன கன மன என்று பாடிய காட்சி வீடியோவாக பிடிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த இரு நாட்டு ரசிகர்களும் ஒருவருக்கு ஒருவர் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
இஸ்லாமியர்கள் மீது திட்டமிட்டு வெறுப்பைத் தூவி வரும் இக்காலகட்டத்தில் அதைப் பொய்யாக்கும் வகையில் இந்நிகழ்வு நடந்துள்ளது.