நீர் வரத்து அதிகரிப்பு – மேட்டூர் அணை நிரம்புகிறது

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக கனமழை பெய்தது. இதனால் அதிக நீர்வரத்து காரணமாக ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் வேகமாக நிரம்பின. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்ப‌ட்டது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால், அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்த‌து. கடந்த ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி கபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 4 ஆயிரத்து 908 கனஅடி என மொத்தம் 19 ஆயிரத்து 908 கனஅடியாக தண்ணீர் திறப்பு குறைந்தது.

அதேபோல், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 20,495 கனஅடியில் இருந்து 14,661 கனஅடியாக குறைந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீர் விநாடிக்கு 19,999 கன அடியிலிருந்து 18,400 கன அடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணை நீர்மட்டம் 119.98 அடியாகவும், நீர் இருப்பு 93.43 டிஎம்சியாகவும் இருந்தது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,278 கனஅடியில் இருந்து 16,605 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.61 அடியாகவும், நீர்இருப்பு- 92.85 டிஎம்சியாகவும் உள்ளது.

இதனால் மீண்டும் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response