பிக்பாஸில் ஜெயலலிதாவைப் பற்றிப் பேசினேனா? – கமல் விளக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்…..

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் தேர்வுத்தாளை மறுமதிப்பீடு செய்ததில் ஊழல் என்பதைவிட, எந்தெந்த துறைகளில் ஊழல் செய்யவில்லை என்பதைத்தான் பட்டியல்போட வேண்டும். ஊழல்கள் பற்றி பல வருடங்களாக பலர் குரல் எழுப்பி வந்துள்ளனர். அதில் நானும் ஒருவன்.

நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் ‘ஊழலற்ற’ என்ற வார்த்தையை தைரியமாக உபயோகப்படுத்த இருக்கிறோம். நாங்கள் அப்படித்தான் இருக்கிறோம். அதனால் எங்களால் அப்படி பேசமுடியும். அதுதான் எங்கள் மூலகாரணமாக இருக்கும். எங்கள் கட்சியில் உள்ள இந்த சிக்கலான பிரச்சினை காரணமாக நிறைய பேர் கூட்டணிக்கு வரமாட்டார்கள்.

தமிழக அரசுக்கு வெளிப்படைத்தன்மை இல்லை என்பது லோக் ஆயுக்தாவை நீர்த்துப்போக செய்ய வைத்ததில் இருந்தே தெரிகிறது. சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதில் உள்நோக்கம் இருக்கிறது. தங்களை காப்பாற்றிக்கொள்ளவே சிலை கடத்தல் வழக்கை மாற்றி உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றி நான் தனியாக சொல்ல முடியாது. கட்சியினருடன் கலந்து ஆலோசித்து தெரிவிப்போம். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கண்டிப்பாக போட்டியிடும்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை நீங்கள் பார்ப்பது போல் நானும் புன்சிரிப்புடன் பார்க்கிறேன். ஜெயலலிதாவை பற்றி என்ற யூகத்தின் அடிப்படையில் வழக்கு போட்டு இருப்பது வியப்பாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது.

‘விஸ்வரூபம் 2’ படத்தை பற்றி பேசக்கூடாது என்பது நீதிமன்றத்தின் ஆணை. ஆனால் எதிர்தரப்பினர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நீதிமன்றத்தை பற்றி கவலையில்லை என நினைக்கிறேன். ஆனால் நான் பேசமாட்டேன். கண்டிப்பாக திட்டமிட்டபடி ‘விஸ்வரூபம் 2’ வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response