ஆர்ப்பரிக்கும் காவிரி – மக்கள் கொண்டாட்டம்

கர்நாடக மாநிலம் குடகுமலை மற்றும் கேரள மாநிலத்தில் வயநாடு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.

இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டதால், அவற்றில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 124.80 அடி கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 123.43 அடியை எட்டிவிட்டது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 43 ஆயிரத்து 654 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடிதான் பாக்கி இருப்பதால், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று காலை வினாடிக்கு 32 ஆயிரத்து 7 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மாலை 4 மணிக்கு மேல் அணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது.

இதன்மூலம் இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஐந்தருவிகள் மற்றும் பிரதான அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

காவிரியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணை வரையிலான காவிரிக் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட கூடுதல் தண்ணீர் இன்று (திங்கட்கிழமை) மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தால், அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடிக்கும் மேல் உயர வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரத்து 314 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 85 அடியை எட்டியது.இன்று 90 அடியாக உயரும் என்று சொல்லப்படுகிறது.

இதனால் காவிரிக் கரையோர மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Leave a Response