மத்திய அமைச்சராக இருந்தபோது புகைபிடிக்கும் காட்சிகளை தடை செய்யாதது ஏன்? – அன்புமணி விளக்கம்

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 29 ஆண்டுகள் நிறைவடைந்து, 30-வது ஆண்டு நேற்று தொடங்கியது. அதையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு கட்சி கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்த விழாவில், பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசு, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பின்னர் அன்புமணி ராமதாசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பா.ம.க. தனது 30-வது ஆண்டில் கால் வைக்கிறது. நாங்கள் கடந்து வந்த பாதை கடுமையானது. தமிழகத்தில் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். முக்கிய போராட்டம் மதுவிலக்கு ஆகும்.

இந்திய அளவில் 2 இடஒதுக்கீடும், தமிழக அளவில் ஒரு இடஒதுக்கீடும் பெற்றுத்தந்தது பா.ம.க. தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடும், மத்தியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு அகில இந்திய மருத்துவ படிப்பில் தனியாக இடஒதுக்கீடும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடும் பெறுவதற்கு முக்கிய காரணம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆவார்.

தமிழகத்தில் தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறுவதே எங்கள் மதுவிலக்கு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இந்திய அளவில் தேசிய மற்றும் மாநிலநெடுஞ்சாலைகளில் 75 ஆயிரம் மதுக்கடைகளும், தமிழகத்தில் 3 ஆயிரத்து 321 மதுக்கடைகளும் மூடியிருப்பதற்கு காரணம் பா.ம.க. தான்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை பா.ம.க. எதிர்க்கிறது. இந்த திட்டத்தால் மாநில பிரச்சினைகள் அடிபடும். 2 தேர்தல்களும் சேர்ந்து வந்தாலும், தனித்தனியாக வந்தாலும் சந்திக்கும் வகையில் வியூகம் அமைத்து உள்ளோம். அரசியல் முடிவுகள் அனைத்தும் தேர்தல் நேரத்திற்கு 3 மாதங்களுக்கு முன் எடுப்போம். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இல்லை.

பருப்பு ஊழல் உள்பட 24 துறைகளில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து, 208 பக்கத்தில் கவர்னருக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஊழல் செய்வதும், ஊழலுக்குத் துணை போவதும் ஒன்று தான்.

நான் மத்திய அமைச்சராக இருக்கும் போது சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சியைத் தடை செய்ய எனக்கு அதிகாரம் இல்லை. புகையிலைப் பொருட்கள் முறைப்படுத்துவதற்கு மட்டுமே அதிகாரம் இருந்தது. வேளாண்மைத்துறை, தொழில்துறை, வணிகத்துறை உள்ளிட்ட 5 அமைச்சர்களைச் சார்ந்தது. எனவே எனக்கு என்னென்ன அதிகாரம் இருந்ததோ அதை பயன்படுத்தி புகையிலை மாபியாக்களை தைரியமாக எதிர்த்தேன்.

இதெல்லாம் சினிமாக்காரர்களுக்கு தெரியாது. அவர்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருப்பார்கள். சென்னையில் இருந்து சேலத்துக்கு 3 வழித்தடங்களில் சாலை போக்குவரத்து, 2 வழித்தடங்களில் ரெயில் பாதைகள், விமான நிலையம் ஏற்கனவே இருக்கும் போது, தற்போதைய 8 வழிச்சாலை திட்டம் எதற்கு?

இந்த 8 வழிச்சாலைத் திட்டத்தை சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக நிறைவேற்றினால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். சுற்றுலா மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஏற்படும். அதற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவானாலும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப் போவது இல்லை.

சினிமா நடிகர்களுக்கு எதார்த்தம் என்ன? உண்மை நிலை என்ன? என்பது தெரியாது. யார் சொல்வதையோ கேட்டுக் கொண்டு சினிமாவில் நடிப்பார்கள். 8 வழி சாலை பற்றி ரஜினிகாந்துக்கு என்ன தெரியும், அதனால் தான் 8 வழிச்சாலை திட்டத்துக்கு அவர் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் 56 கி.மீ தூரம் எனது தொகுதிக்குள் வருகிறது. எனது தொகுதிக்கு செல்வதற்கே எனக்கு தடை விதிக்கப்பட்டது. இதை கோர்ட்டு மூலம் சந்தித்து நாளை அரூர் செல்கிறேன், நாளை மறுநாள் பாப்பிரெட்டி சென்று ஆய்வு செய்ய உள்ளேன். பின்னர் ஆய்வு அறிக்கை தயாரித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்ப போகிறோம். அதன் பிறகும் முடிவு கிடைக்கவில்லை என்றால் சட்டப் போராட்டம் நடத்தத் தயாராக உள்ளோம்

இவ்வாறு அன்புமணி கூறினார்.

Leave a Response