ஆடிக்கிருத்திகை – முருகனுக்கு ஆட்டிறைச்சிப் படையல்

ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஆடிக்கிருத்திகை. முருகனுக்கு உகந்த நாள். அந்நாளில் முருகனுக்குப் படையல் போட்டு, காவடி எடுத்து பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.
நல்ல விசயம்தான்.

அந்தப் படையல் எல்லாம் வெஜிடேரியனாகவே இருக்கிறதே ஏன்? முருகனுக்கு அப்படித்தான் படைக்க வேண்டுமா?

முருகன் கறி-(இறைச்சி) ஏற்கமாட்டாரா?

ஏற்பாரே. அதுதானே அவருக்கு படைக்கப்பட்டது. அதுதானே வழக்கமாக இருந்தது. ஆதாரம் இருக்கின்றதே.

மறிக்குரல் அறுத்துத் தினைப் பிரப் பிரீஇ- குறுந்தொகை-263

அதாவது முருகனுக்கு ஆடு அறுத்து பலி கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் குறுந்தொகை-263 பாடல் கூறுகிறது.
குறுந்தொகை-362,,ல் ‘சிறுமறி கொன்று’ என்பதும் முருகனுக்கு ஆடு அறுத்துக் குறுதிப் பலி கொடுத்ததை கூறுகிறது.

அய்யா இரா. இராகவையங்கார்..’மறிக்குரல் அறுத்து’ என்பதற்கு வெள்யாட்டுக் குட்டியின் கழுத்தை அறுத்து என்றும், ‘சிறுமறி கொன்று’ என்பதற்கு ஆட்டின் சிறிய குட்டியைக் கொன்று என்றும் உரையெழுதியுள்ளார். (பக்கம்-426-பக்-587)

பத்துப்பாட்டு ஆராய்ச்சி எழுதிய தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் அவர்கள்கூட, “குறிஞ்சிநில மக்களால் செய்யப்பட்டதாக மேலே கூறப்பட்ட முருக வழிபாட்டில் வேதங்களிலோ ஆகமங்களிலோ அறிவுபெற்ற புரோகிதர்கள் இடம் பெறவில்லை என்பது கவனத்திற்குறியது.

குறிஞ்சிநில மக்கள் தாங்கள் தொன்று தொட்டு வழிபட்டு வந்த முறையிலேயே வழிபட்டு வந்தார்கள்” என்று தம் ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலில் (பக்கம்-510) கூறுகிறார்.

(இப்படிக் கும்பிட்டாலும் நன்றாக இருக்குமல்லவா)

ஆதாரம்- பாவலர் அறிவுமதி எழுதிய ‘தமிழ் முருகன்’ புத்தகத்திலிருந்து.

Leave a Response