நெஞ்சம் விம்மும் பெருமிதம் – அறிவுமதியின் தாய்ப்பால் அறிமுகம்

கவிஞர் அறிவுமதி பாவலர் அறிவுமதி அண்ணன் அறிவுமதி ஆண் தாய் அறிவுமதி தமிழ்த் தேசியப் பாவலர் அறிவுமதி இப்படிப் பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான அறிவுமதி,

தமிழுக்குத் தடையென்றால்
தாங்கமாட்டேன்!
நான்
தாய்த்தமிழை மீட்காமல்
தூங்கமாட்டேன்

என்று அறைகூவல் விடுத்து தமிழினத்துக்குத் தாய்ப்பால் ஊட்டியிருக்கிறார்.

எண்ணங்களை உருக்கி உருக்கி, எழுத்துகளைச் செதுக்கிச் செதுக்கி அவர் தமிழினத்துக்குக் கொடுத்திருக்கும் 144 பக்கங்கள் அடங்கிய தாய்ப்பால் எனும் புதிய நூலைப் படிக்கப் படிக்க பெருமிதத்தால் நெஞ்சம் விம்முகிறது.

ஒரு பக்கம் அறிவுமதியின் துளிப்பா மற்றொரு பக்கம் ஓவியர் ரவிபேலட்டின் தூரிகைப்பாவுமாக அமைந்திருக்கும் நூலை கண்துஞ்சாச் செயற்பாட்டாளர் இசாக்கின் தமிழ் அலை அழகுபடுத்தியிருக்கிறது.

தாய்ப்பாலில் தமிழினத்தின் பெருமையும் மாந்தநேயத்தின் அருமையும் கரியமில வாயு சூழ்ந்த தற்கால உலகை வெளுத்துச் சுத்தப்படுத்தும் தூய்மையும் நிறைந்து தளும்புகிறது.

எத்தனை மொழியும்
கற்றுக்கொள்!
நம்
இனத்தமிழ் முதலாய்
பெற்றுக்கொள்!

என்று நெகிழ்ந்து கொடுக்கும் அதேவேளை,

உந்தன் மண்ணைத்
தொடமாட்டேன்!
எந்தன் மண்ணை
விடமாட்டேன்!

என்று நரம்பு புடைக்கிறார்.

சேரன் பேசிய
தமிழெங்கே?
அட ஆரியம் கூடிய
துயரங்கே!

என்கிற கவிதையில் ஒரு மாபெரும் வரலாற்றையே வடித்துக் கொடுத்திருக்கிறார்.

ஏதிலி வாழ்க்கை
வலிக்கிறதே!
எம்
தாய்நிலம் கூவி
அழைக்கிறதே!

எனும் வரிகளில் ஈழத்துக் கண்ணீரை இவர் உகுக்கிறார்.

எங்கே போகுது
வெப்பநிலை?
அட
இருக்கா நம்மிடம் தப்புநிலை?

என அறிவியல் பேசும் அவர்,

உயிர்களின் `உலகம்`
மறக்காதே!
அதை
உதறிய உலகம்
இருக்காதே!

உலகம் உயிர்களுக்கானது என்கிற சூழல் தமிழை அள்ளிக் கொடுக்கிறார்.

இப்படி நூலெங்கும் அள்ளக் அள்ளக் குறையாமல், இனத்தின் பெருமை, உயிர்களின் அருமை, உலகின் நிலைமை என விசாலப்பார்வையுடன் தமிழ்ப்பால் அளித்திருக்கிறார்.

இந்நூலுக்கு கவிஞர் பழநிபாரதி எழுதியிருக்கும் அன்புரை அறிவுமதியின் தாய்மையை எடுத்தியம்புகிறது.

கடந்த பல்லாண்டுகளாக அறிவுமதியின் நட்புக்காலம் தமிழுலகை வர்க்கபேதமின்றி ஆண்டுகொண்டிருக்கிறது.எல்லா விசேட நிகழ்வுகளிலும் பரிசுப்பொருளாய்த் திகழ்ந்து கொண்டிருக்கிறது.அந்த இடத்தில் அட்டகாசமாக வந்து அமர்ந்திருக்கிறது தாய்ப்பால்.

– அ.தமிழன்பன்

Leave a Response