
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செப்டம்பர் 5 அன்று கெடு விதித்தார்.
இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்தார். மேலும், அவருடன் கோபி, நம்பியூரைச் சேர்ந்த பல நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அவரது
இல்லத்தில் அதிமுகவினர் தொடர்ந்து சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் இருந்து புறப்பட்டு நேற்று காலை கோவை சென்றார். பின்னர் கோவை, பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
நான் ஹரித்வாரில் உள்ள கோயிலுக்குச் செல்கிறேன். பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்க புதுடெல்லி செல்லவில்லை. 9 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு எதுவும் இல்லை. ‘கலங்க வேண்டாம்; நியாயமான கோரிக்கையைத் தான் வைத்துள்ளீர்கள்’ என தொண்டர்கள் என்னிடம் சொல்கிறார்கள்.
எனவே, கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்தால் மனம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும். அமமுக
பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்துக்கு நான் பதில் கூற முடியாது. கட்சியின் நன்மைக்காக என் கருத்தைச் சொன்னேன்.
பல்வேறு முடிவுகளை கட்சியின் பொதுச்செயலாளர் எடுத்துள்ளார். அவர் முடிவுக்கு கருத்துச் சொல்ல இயலாது. காலம்தான் பதில் சொல்லும். பாஜக தலைவர்களைச் சந்திக்க நான் ஹரித்வார் செல்லவில்லை. இராமரை
சந்திக்கச் செல்கிறேன். வேறு யாரையும் சந்திக்கவில்லை. நாளை பிற்பகல் திரும்புகிறேன். 2 நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என்னைச் சந்தித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, ‘உங்களை அதிமுக நிர்வாகிகள் யாராவது சந்தித்தார்களா?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலில் ‘நோ கமென்ட்ஸ்’ என்றவர், மீண்டும் அதே கேள்வியைச் செய்தியாளர்கள் எழுப்பியதால் ‘சஸ்பென்ஸ்’ என்றார். மேலும்,எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து யாராவது பேசினார்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கும், ‘நோ கமென்ட்ஸ்’ எனக் கூறிவிட்டு செங்கோட்டையன் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் செங்கோட்டையன் நேற்று இரவு சந்தித்தார். அப்போது, அதிமுகவில் இருந்துதான் நீக்கப்பட்டது குறித்தும் தற்போதைய சூழல் குறித்தும் அவரிடம் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் அறிந்து எடப்பாடி தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.கே.ஏ.செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகளைப் பறிக்கிறோம் என்கிற தகவலை பாஜக மேலிடத்துக்குச் சொல்லிவிட்டு அவர்கள் சம்மதத்துடன் தான் செய்தோம்.எங்களிடம் அவரை நீக்கச் சம்மதம் சொல்லிவிட்டு பின்னர் அவரையும் வரச் சொல்லி சந்திக்கிறார் அமித்ஷா/இது சரியா? என எடப்பாடி தரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.


