அதிமுக பாஜக கூட்டணி குழப்பம் – அடிப்படைக் காரணம் இதுதான்?

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயன்றது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கூட்டணி உடைந்தது.இருவரும் தனித்தனி அணி அமைத்துப் போட்டியிட்டனர். இருவரும் தோல்வியை தழுவினர். அதைத் தொடர்ந்து அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டது. புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்த அதிமுகவை உடைக்கும் முயற்சியை பாஜக தொடங்கியது. இதற்காக செங்கோட்டையனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் எடப்பாடி தில்லி சென்று கூட்டணி அமைத்தார்.

இதனால் கூட்டணி உருவானது. கூட்டணியை அறிவிக்கும்போது, தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும் என்று அமித்ஷா அறிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, கூட்டணி அமைச்சரவை எல்லாம் கிடையாது. இந்தக் கூட்டணி அமைச்சரவை அமைக்கும் என்றுதான் அமித்ஷா தெரிவித்தார் என்றார். ஆனால் அதன்பின்னர் தொடர்ந்து பல பேட்டிகளில் கூட்டணி அமைச்சரவைதான் என்று அமித்ஷா கூறினார். எடப்பாடியும் தனித்து ஆட்சி அமைப்போம் என்றார். அதனால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டாம் என் பாஜக நினைக்கிறது.இப்போது நடக்கும் அரசியல் குழப்பங்களுக்கு அடிப்படைக் காரணம் இதுதான் என்கிறார்கள்.

இதனால் மீண்டும் அதிமுகவை உடைக்கும் பணியை பாஜக தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாகத்தான் ஓபிஎஸ்சும் டிடிவி.தினகரனும் ஒருவர் பின் ஒருவராக கூட்டணியை விட்டு விலகினர்.

இதன் பின் அதிமுக தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கூறி செங்கோட்டையனை குரல் கொடுக்க வைத்தது பாஜக. அதன்படி அவரும் குரல் கொடுத்தார்.அதனால், செங்கோட்டையனின் பதவியை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். இதனால்,நேற்று முன்தினம் காலையில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை இரவு செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார்.

அப்போது அதிமுகவை உடைப்பது குறித்தும், எடப்பாடியை கட்டுப்பாட்டில் வைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதற்கான ஒரு செயல்திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையன் நேற்று பிற்பகலில் டெல்லியில் இருந்து கோவை திரும்பினார்.

அதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரனை தில்லி வரும்படி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.அந்த அழைப்பைத் தொடர்ந்துதான், முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் கூட்டணியில் இணையத்தயார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார் என்று சொல்கிறார்கள்.

இன்னொருபுறம், செங்கோட்டையன் போல் அதிமுகவில் மேலும் பல தலைவர்கள் போர்க் கொடி தூக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response