ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றால், பிரதமர் மோடியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கூறினார்.
ஏப்ரல் 20 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது,,
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆசை ஜெயலலிதாவின் ஆட்சி தொடரவேண்டும் என்பதுதான். இந்த ஆட்சி நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்று துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஒதுங்கி விட்டார். அவரது செயலை நாங்கள் பாராட்டுகிறோம்.
அதிமுக முதல்வர் எடப்பாடி தலைமையில் ஜெயலலிதா ஆட்சி நடைபெறுகிறது. இரட்டை இலையில் வெற்றிபெற்ற நானும், வெற்றிவேல் எம்எல்ஏவும் முதல்வரை பார்த்து தொகுதி பிரச்னை குறித்து பேசிவிட்டு வந்தோம். கட்சி இணைப்பு குறித்து பேசவில்லை. நாங்கள் நியாயமான முறையில் ஆட்சி நடத்துகிறோம். நியாயமாக துணைப் பொதுச்செயலாளர் அரசியலை விட்டு ஒதுங்கி நிற்கிறார். இனி, நீங்கள்தான் (ஓபிஎஸ் அணி) இறங்கி வந்து பேசி ஒன்று சேர வரவேண்டும்.
இன்னமும் எங்கள் மேல் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்துக் கொண்டிருந்தால் இது உள்நோக்கத்தோடு செய்யும் செயலாகும். சத்தியமாக சொல்கிறேன், நீதி விசாரணை வேண்டும். 60 நாள் முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தார்கள்.
எய்ம்ஸ் மருத்துவமனை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? அது மத்திய அரசு மருத்துவமனை. யாரையெல்லாம் விசாரணைக்கு கூப்பிடுவீங்க. ஓ.பன்னீர்செல்வத்தை விசாரணைக்கு கூப்பிட வேண்டும், பிரதமர் மோடியை விசாரணைக்கு கூப்பிட வேண்டும், எய்ம்ஸ் மருத்துவமனையை விசாரணைக்கு கூப்பிடணும், லண்டன் டாக்டர், சிங்கப்பூர் டாக்டரை விசாரணைக்கு கூப்பிடுங்க…. மர்மம் மர்மம்ன்னு எத்தனை நாளைக்குத்தான் நீங்க சொல்வீங்க. 60 நாள் முதல்வரா இருக்கும்போது உங்களுக்கு மர்மமா தெரியலை, முதல்வர் பதவி கிடைக்கவில்லைன்னா மர்மமா? இதுக்கு ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எய்ம்ஸ் மருத்துவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தங்கதமிழ்ச்செல்வன் கருத்தைப் பலரும் ஆமோதிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் இதை வைத்து அரசியல் செய்ய நினைத்த பாஜக வினர் இக்குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.