புலிகள் பேணிக்காத்த இயற்கை வளங்களை அழிக்கும் தீவிர முயற்சியில் சிங்கள இராணுவம்

கடந்த முப்பது வருடங்களாக விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்டு வந்த காடுகளை அழிக்கும் நடவடிக்கையில் சிங்கள இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் விடுதலைப்புலிகளால் வளர்க்கப்பட்ட தேக்கு மரக் காட்டினை அழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வடபகுதி எங்கும் விடுதலைப்புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை வளத்திட்டங்கள் தற்போது பெரும் வரப்பிரசாதகமாக மாறியுள்ளது. அதனை முற்றாக அழிக்கும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.

இதற்காக அந்தப் பகுதியிலுள்ள மக்களின் உதவியை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1990ம் ஆண்டுக் காலப்பகுதியில் விடுதலைப்புலிகளினால் தாண்டிக்குளம் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் வளர்க்கப்பட்ட தேக்கு மரக் காடு தற்போது அரைவாசியாக அழிக்கப்பட்டுள்ளது.

மாங்குளம்-ஒட்டுசுட்டான் வீதியின், கேப்பாப்புலவு பிரதேசத்தில் அமைந்துள்ள தேக்கு மரக் காட்டிற்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

இறுதிக்கட்டப் போர் முடிவடைந்த நந்திக்கடலின் மறுபக்கத்திலுள்ள தேக்குக் காடு கிட்டத்தட்ட நூறு ஏக்கர் வரையிலானது.
இந்த அனைத்துப் பகுதிகளும் இன்று வரையில் இராணுவமயமாக்கப்பட்டுள்ள நிலையில் பல இராணுவ முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தேக்கு மரக்காடுகள் மட்டுமின்றி, முந்திரி மற்றும் மாம்பழத் தோட்டங்களும் விடுதலைப்புலிகளினால் மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்டது. ஏ 32 வீதியில் பயணிக்கும் போது 15 ஆண்டுகள் பழமையான முந்திரி மரங்களைக் காண முடியும்.

விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பகுதிகளில், காடு வளர்ப்பு நடவடிக்கையினை அந்த அமைப்பின் வளப்பாதுகாப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்டது.

முந்திரி மற்றும் மாம்பழத் தோட்டங்கள் அவர்களினால் மிகவும் அமைப்பு ரீதியில் உருவாக்கப்பட்டது. இந்தத் தோட்டங்களில் வளர்க்கப்படும் பழங்களை விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக காணப்பட்டுள்ளது.

இந்தக் காடுகளில் மரம் வெட்டும் நடவடிக்கைகள் விடுதலைப்புலிகளினால் முழுமையாகத் தடை செய்யப்பட்டதுடன், 24 மணி நேரப் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. யாராவது மரம் வெட்டி அவர்களிடம் சிக்கிய சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகளினால் தண்டிக்கப்பட்டார்கள்.

கடந்த வருடம் முல்லைத்தீவில் அமைந்துள்ள பெரிய காடுகளின் மரங்கள் சிங்கள அரசியல்வாதிகளால் வெட்டி விற்பனை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியது.

இப்போது, வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தினர் இந்தக் காடுகளை அழித்து அதனை தனிப்பட்ட வருமானமாக மாற்றிக் கொள்வதாகத் தெரியவந்துள்ளது.

இந்த தேக்கு மரங்களை வெட்டி பெரிய வாகனங்களில் இராணுவத்தினர் ஏற்றுவதை தமிழ்மக்கள் வேதனையுடன் பார்க்கிறார்கள்.

போர் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், சிங்கள அரசாங்கமும் இராணுவமும் திட்டமிட்டு காடுகளை அழிக்கும் போது விடுதலைப்புலிகள் அதனை வளர்த்தார்கள் என யாழ் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response