தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது – சசிகலா விமர்சனம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை அமைந்துள்ளது.இந்தச் சிறையில் ஒரே அறையில் 17 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் அக்டோபர் 26 இரவு,அந்த அறையில் இருந்த கைதி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகச் சிறைக் காவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கைதிகள், காவலர்களைத் திடீரெனத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தேனி மாவட்ட கிளைச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது தமிழக காவல்துறை முற்றிலும் தோல்வியடைந்திருப்பதைத்தான் காட்டுகிறது. இது போன்ற சம்பவங்களால் பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது.தமிழக காவல்துறை சிறையில் இருக்கும் கைதிகளையே பாதுகாக்க முடியவில்லையென்றால்,வெளியில் இருக்கும் குற்றவாளிகளை தப்பித்துவிடாமல் எவ்வாறு பிடிக்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் குறைந்துவிட்டது.

தமிழக அரசு சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதிலும் தோல்வியடைந்துவிட்டது.செஞ்சியில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த சிறுமி மாயமாகி இன்றோடு 17 நாட்கள் ஆகிவிட்டது.ஆனால் காவல்துறை கண்டுபிடிக்க முடியாமல் இன்றுவரை திணறிக்கொண்டிருக்கிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் குற்றச்செயல்கள் நடைபெறாதவாறு இரும்புக்கரம் கொண்டு அடக்கிவைத்தார்கள்.ஆனால் அதன்பிறகு ஆட்சிகள் பல மாறினாலும் யாராலும் சட்டம் ஒழுங்கை காப்பாற்றமுடியவில்லை.தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவலநிலை தான் இன்றுவரை உள்ளது.

எனவே,தேனி சிறைச்சாலையில் இருந்து தப்பியவர்களை விரைவில் கண்டுபிடித்து மீண்டும் சிறையில் அடைக்கவேண்டும் எனவும்,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றிட தேவையான நடவடிக்கைளை விரைந்து எடுக்கவேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response