
2021-26 திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பதவி வகித்தார். அப்போது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பிற அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி நடந்ததாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் காவல்துறையில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில்,திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், சங்க மாநிலப் பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாகஅன்பில் மகேஷ் வீட்டில் இலஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனை நடத்தியது.
இந்த வழக்கில் முன்பிணை கோரி முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்திருந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி வி.இலட்சுமி நாராயணன் இன்று காலையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
முன்பிணை மனு இன்று காலையில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,மாலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள இல்லத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ், வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது….
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு.அன்பில் மகேஷ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம்,சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும்,அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து,மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
அன்பில் மகேஷ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார்.அதேசமயம்,இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


