திருப்பூர் மகேஸ்வரன் தீக்குளித்து மரணம், ஜெயலலிதாவே காரணம் – அதியமான் அறிக்கை

திருப்பூர் நெருப்பெரிச்சல் வாவிபாளையத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 38). இன்னும் திருமணமாகவில்லை. ஆதித்தமிழர் பேரவையின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவராக இருந்து வந்தார். பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

அவர் ஏப்ரல் 11 ஆம் தேதி நள்ளிரவில், திருப்பூர் பூங்கா சாலையோரம் உள்ள மின்கம்பம் அருகே மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

மகேஸ்வரன் தீக்குளித்து இறந்த இடத்துக்கு அருகே சிறிய நாட்குறிப்பு ஒன்று கிடைத்தது. அதில் தமிழக அரசு அருந்ததியருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார். இதே கோரிக்கைக்காக கடந்த 2013–ம் ஆண்டு ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி வக்கீல் நீலவேந்தன் என்பவர் தீக்குளித்து தற்கொலை கொண்டார். அவர் இறந்த அதே இடத்தில் மகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மகேஸ்வரன் தனது நண்பர்களுக்கு ‘வாட்ஸ்–அப்’ மூலமாக தகவல் தெரிவித்து விட்டு மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிகழ்வையொட்டி, ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் விடுத்துள்ள அறிக்கையில்,

மகேஸ்வரனின் இழப்பே இறுதியாக இருக்க வேண்டும் பேரவை தோழர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்,

போராடி சாதிக்க வேண்டிய இளைஞர்கள் இப்படிப்பட்ட தீக்குளிப்பு தற்கொலை நடவடிக்கையில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல!

11.4.2017 நேற்று இரவு திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் வாவிபாளையத்தைச் சேர்ந்த தோழர் மகேஸ்வரன் அவர்கள் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை உயர்த்தக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி குறிப்பெழுதி வைத்து விட்டு திருப்பூரில் தீக்குளித்து மரணமடைந்தார், என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தோழரின் இழப்பினால் பெரும் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவரது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உள் ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்காக உயிர் ஈகம் செய்திட்ட மதிப்புமிக்க தோழர் மகேஸ்வரனுக்கு எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

2012 ஆம் ஆண்டு திருப்பூரில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேரவையின் நிதிச்செயலாளராக இருந்த வழக்கறிஞர் தோழர் நீலவேந்தன் அவர்களும், மாநில மகளிர் அணி செயலாளராக இருந்த தோழர் ராணி அவர்கள் திருச்சியிலும், உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து உயிர் ஈகம் செய்துள்ள சம்பவங்களையொட்டி, இது போன்ற உயிர் தியாக சம்பவங்கள் இனி கூடாது, அந்த இரண்டு உயிர்களுமே இறுதியாக இருக்கட்டும் என பலமுறை தோழர்களிடம் வலியுறுத்தி வந்துள்ளேன், அப்படி வலியுறுத்தியும் கூட தோழர் மகேஸ்வரன் அதே ஆயுதத்தை கையிலெடுத்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியாரின் கொள்கைப்படி களமாடும் ஆதித்தமிழர் பேரவை, மக்களுக்கான உரிமைகளை ஆளும் அரசுகளிடம் போராடித்தான் பெறவேண்டும் என்றுதான் கற்பித்து வருகிறது. அப்படி போராடியும் ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைளுக்கு அரசுகள் மதிப்பளிக்காத நிலையில்தான், தோழர்கள் இது போன்ற முடிவுகளுக்கு செல்கிறார்கள் என்றே கருத முடிகிறது.

கலைஞர் அவர்கள், ஆட்சியில் இருந்த போது நமது கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு அருந்ததியர்களுக்கு மூன்று விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கி ஒளி ஏற்றி வைத்தார். ஆனால் பின்னால் வந்த அம்மையார் ஜெயலலிதா அரசு அதை முழுமையாக நடைமுறைப் படுத்தாமலும், அவரது அமைச்சர்கள் கையூட்டைப் பெற்றுக் கொண்டு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை மற்ற சமூகங்களுக்கு மடைமாற்றி விட்டதன் விளைவுதான், நீலவேந்தனையும், ராணியையும் இழக்க நேரிட்டது. அதனுடைய நீட்சியாகத்தான் தற்போது மகேஸ்வரன்.

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலமும், கிராமப் புறங்களில் நிலமற்ற விவசாயக் கூலிகளாக வாழ்வாதாரத்தை இழந்து வறுமைக் கோட்டிற்கு கீழாக வாழக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்களில் மூன்றில் ஒரு பங்கான அருந்ததியர் மக்களை கைதூக்கி விடுவதற்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை தட்டிப் பறிக்காமல், இம் மக்களை இழிவிலிருந்தும், வறுமையிலிருந்தும் கைதூக்கி விட மக்கள் தொகைக்கு ஏற்றவாறு உள் இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கிட வேண்டும் எனவும், உயிரிழந்த மூவரையும் சமூகநீதிப் போராளிகள் என அறிவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் பேரவை தோழர்கள் இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்களில் எந்த நிலையிலும் ஈடுபடக்கூடாது இதுவே இறுதியாக இருக்கட்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Response