
தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு மாதத்துக்கும் மேலாகத் தொடரும் போராட்டத்துக்கு, பல்வேறு மாநில விவசாயிகள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் மத்திய அரசு இதுவரை அவர்களைச் சந்திக்கக்கூட இல்லை. இந்நிலையில், நடிகர்,இயக்குநர் ராஜ்கிரண், தன்னுடைய முகநூல் பதிவில்,
விவசாயி வயிறெரிஞ்சா
அந்த நெருப்பில் எல்லாமே பொசுங்கிப்போகும்.
விவசாயிகளை வாழ விடுங்கள்… இல்லையெனில்
அதற்குக்காரணமான எல்லா அரசியல்வாதிகளும்
மிகக்கேவலமான நிலையை எதிர்கொள்வீர்கள்
என்று பதிவிட்டுள்ளார்.


