பிரதமர் மோடி தலைமையில் நவம்பர் 8 அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கறுப்புப் பணத்தைக் கட்டுப் படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பிரதமர் மோடி, தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் செல்லாது. இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 8-2016) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
எனினும் அவசரத் தேவையைக் கருதி நவம்பர் 11-ம் தேதி வரை மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற பால் நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில்வே, பஸ் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்கள், அரசு கூட்டுறவு அங்காடிகளில் மட்டும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும்.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை அஞ்சல் நிலையங்கள், வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
இந்த காலக்கெடுவுக்குள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாதவர்கள் வங்கிகளில் தகுந்த அடையாளச் சான்றுகளை சமர்ப்பித்து வரும் மார்ச் 31-ம் தேதி வரை ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். நாடு முழுவதும் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும்.
நவம்பர் 9-ம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் பொதுவிடுமுறை அளிக்கப்படும். இதேபோல நவம்பர் 9, 10-ம் தேதிகளில் வங்கி ஏடிஎம் மையங்கள் செயல்படாது.
ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 மற்றும் அனைத்து நாணயங்களும் செல்லுபடியாகும். இந்த ரூபாய் நோட்டுகளை வழக்கம்போல பயன்படுத்தலாம். தற்போதைக்கு ஏடிஎம் மையங்களில் நாளொன்றுக்கு ரூ.2000 மட்டுமே பணம் எடுக்க முடியும். வங்கி கணக்கில் இருந்து நாளொன்றுக்கு ரூ.10,000, வாரத்துக்கு ரூ.20,000 மட்டுமே எடுக்க முடியும் என்று வரம்பு நிர்ணயிக்கப்படும். நெட் பேங்கிங், பணம், டிடி நடவடிக்கைகளில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.
உலகளாவிய அளவில் பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதேநேரம் ஊழல் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா முதல் வரிசையில் உள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 1.25 லட்சம் கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது. எனினும் இன்னமும் கோடிக்கணக்கில் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பணமும் ஊழலும் நாட்டின் வளர்ச்சிக்கு, ஏழைகளின் முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக உள்ளன.
மத்திய அரசு எப்போதுமே ஏழைகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. அவர்களின் நலன் கருதி கறுப்புப் பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சிகள், ஊடகங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மோடியின் இவ்வறிப்பால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். எவ்வித முன்னறிவிப்புமின்றி அடாவடியாக மக்கள் வாழ்க்கையில் விளையாடுவதா? என்கிற கொதிப்பு பரவலாக இருக்கிறது. இது தொடர்பாக எழுத்தாளர் மதிவாணன் எழுதியுள்ள பதிவில்,
500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்து மோடி அறிவித்துள்ளார். ATM வாசல்களில் பெரும் கூட்டம். பலர் அல்லாடுகிறார்கள். ஏனெனில் இன்றைய நிலவரத்தில் 500 அல்லது 1000 என்பது அன்றாட செலவு என்பது இயல்பாகிவிட்டது. கறுப்புப் பணத்தைச் சேர்க்க அல்ல, மாறாக, வசதிக்காக 500-1000 தாள்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் நடுததர வர்க்கமாக கூட இருக்கலாம். ஆனால், பணக்காரர்கள் அல்ல. இன்றைய நிலையில் 500 ரூபாய் மட்டும் கையில் வைத்துள்ள ஒருவர் அதனைக் கொடுத்து பொருள் வாங்க முடியாது.
‘இந்த 500- 1000 ஒழிப்பின் மூலம் கறுப்புப் பணம் செல்லாதது ஆகிவிடும் என்று மோடி சொல்கிறார்.
ஆனால், கறுப்புப் பணக்காரர்கள், நம்ம ஊர் ஜெயலலிதா உள்பட நோட்டுகளை சொத்துக்களில் முதலீடு செய்கின்றனர். கொடநாடு முதல் உலகின் வேறு நாடுகளில் சொத்துக்களாக மாற்றி சுகமாக வாழ்கிறார்கள். இந்தியாவில் இருந்து தப்பி ஓடியதாகச் சொல்லப்படும் சாராய அதிபர் விஜய் மல்லையா பிரிட்டனில் மேம்பட்ட சொகுசு- திமிறுடன் வாழ முடிகிறது. அவர் போன்ற சில 100 பணக்காரர்களின் சொத்துக்களையும் வருமானத்தையும் மதிப்பிட்டு திருட்டுச் சொத்துக்களைக் கைப்பற்ற வக்கற்ற மோடி, அனைத்து மக்களையும் அலைக்கழிக்கும் பண ஒழிப்பில் புரட்சி வேடம் போடுகிறார்.
இன்றைய நிலையில், 500 – 1000 மக்களின் அன்றாட செலவு என்றான நிலையில், பெரும் துன்பத்திற்கு ஆளாவது நடுத்தர, கீழ் நடுத்தர மக்களே.
ஆனால், நாம் ஒரு கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. சுவிஸ் பணத்தை மீட்டு குடும்பம் ஒன்றுக்கு 15 லட்சம் தருவேன் என்ற மோடியின் கதை என்ன ஆயிற்று?
சரி. அதை விடுங்கள். 1000 ரூபாய் நோட்டு கள்ளப் பணத்திற்கு வழி வகுக்கிறது என்றால், 2000 ரூபாய் நோட்டு எதற்கு?
கூடுதல் பண மதிப்பை, 2000 ரூபாய் நோட்டை, கருப்புப் பணக்காரர்கள் அனுபவிக்க 500 என்ற தொகையை அன்றாடம் ஏழைகள் செலவழிக்க 2 வேறுபட்ட இந்தியாவிற்கான வழியா இது? அதாவது, சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஏழைகள் பயன்படுத்த பெரிய மதிப்புள்ள நோட்டுகளில் கள்ளப் பணத்தை பணக்காரர்கள் சேமிப்பதற்கான வழியா இது?
அல்லது, அம்பலப்படும் மோடியின் தகுதியை, உபி தேர்தலுக்கு முன்பு, உயர்த்திக்காட்டும், சர்ப்பரைஸ் ஸ்டைரைக்கா இது?
அல்லது, சில நாட்களில், ரிவர்ஸ் கியர் போட்டு கள்ளப் பணக்காரர்களிடம் கமிஷன் பெறுவதற்கான திட்டமா இது?
அல்லது, மாட்டுக்கறி, முஸ்லீம் வெறுப்பு, பாக்கிஸ்தான் எதிர்ப்பு என்பது போன்ற விஷ(ய)ங்கள் பலன் தரவில்லை என்பதால், போடப்படும் முற்போக்கு வேடமா இது?
எப்படியிருந்தாலும், மோடி, மிகப் பெரிய கேடி. அவர் குஜராத்தில் செய்த ஊழல்கள் உலகறிந்தவை.
சரி. கருப்புப் பணக்காரர்களை ஒழிக்க நினைக்கும் மோடி அரசு, பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கி, பின்னர் திருப்பித் தராத முதல் 100 பணக்காரர்கள் பட்டியலை மறுப்பதேன்?
நவ தாராள வாதப் பொருளாதாரம் என்பது ஊழலின் ஊற்றுக் கண். அதன் தற்போதைய கதாநாயகன்- அதாங்க மோடி- கருப்புப் பணத்தின் எதிரியா? நிச்சயம் இல்லை.
ஆனால், ஒன்று உறுதி. அச்சா தின் (நல்ல நாள்) என்று உறுதி அளித்த மோடி தனது கெட்ட நாளை தேர்ந்தெடுத்துக் கொண்ட நாள் இது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.