ரூ 500, 1000 செல்லாது என்று மோடி அறிவித்துள்ளார். அதற்கு கொஞ்சம் ஆதரவும் நிறைய எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. அவருடைய இந்த அறிவிப்பை வரவேற்கிறார் பசுமைதாயகம் அருள். அதேசமயம், புதிய ரூபாய் தாளில் இந்தி ஆதிக்கம் இருப்பதைச் சுட்டிக்காட்டி அதைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். அவருடைய பதிவில்,
இந்தியாவில் ரூ.1000, ரூ.500 தாள்கள் இனி செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
ஆனால், இந்த நல்ல நடவடிக்கையின் நடுவே, புதிய ரூபாய் தாளின் வழியாக இந்தி திணிப்பில் மோடி அரசு இறங்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல! கண்டிக்கத் தக்கது.
“புதிய ரூபாய் தாளில் மொழிவெறி”
பழைய ரூபாய் தாளுக்கு பதிலாக, நவம்பர் 10 ஆம் நாள் முதல் புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் தாள்களை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளையும் இதுவரை சமமாகப் பயன்படுத்தி வந்தது இந்திய ரிசர்வ் வங்கி. ஆனால், அறிவிக்கப்பட்டுள்ள புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் தாள்களில் இந்தி மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் தவிர்க்கப்பட்டுள்ளது.
புதிய ரூபாய் தாள்களில், தூய்மை இந்தியா – தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி – எனும் பொருள்படும் ஹிந்தி வாசகம் இடம்பெற்றுள்ளது.
स्वच्छ भारत: ‘एक कदम स्वच्छता की ओर’
(Swachh Bharat: ek kadam swachhata ki aur)
– எனப்படும் இந்த இந்தி வாசகத்துக்கு இணையான,
“Clean India – A step towards cleanliness”
என்கிற ஆங்கில வாசகம் இல்லை.
இப்படி, ஹிந்தி வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தை இல்லாமல் இந்திய ரூபாய் தாள் வெளியிடப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.
இந்திய நாட்டில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தேசிய மொழி இந்தி அல்ல என்று நீதிமன்றங்கள் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டுடனான உறவில் மத்திய அரசு இந்தியை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய சட்டம் கூறும் நிலையில், மாநிலங்களுடனான உறவில் ஆங்கிலம் இந்தி என இரண்டுமே பயன்படுத்தப்படும் என்று ஜவகர்லால் நேரு வாக்குறுதி அளித்துள்ள நிலையில் – புதிய ரூபாய் தாள்களில், இந்திக்கு மட்டும் முன்னுரிமை அளித்தது எப்படி?
மோடி அரசின் மொழி வெறி ஒழிக.