வாடி வாசுகி, வந்து என்னோடு ஆயிரம் சண்டைகள் போடு – ஒரு கவிஞனின் நெகிழ்ச்சி

ஈழத்தைச் சார்ந்த குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவர் வ.ஐ.ச.ஜெயபாலன். உலகெங்கும் ஏதிலியாய்த் திரிந்துகொண்டிருக்கும் அவருக்குக் குடும்ப வாழ்விலும் சோகம். மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். மனைவியை மீண்டும் சேர்து வாழ அழைக்கும் அவருடைய கவிமனசின் பதிவு இக்காலகட்டத்து இணையர்கள் படித்தறிய வேண்டிய ஒன்று என்பதற்காக இங்கே வெளியிடப்படுகிறது.

என்விதி என்று தலைப்பிட்டு அவர் எழுதியிருக்கும் பதிவில்,

நிதிசார்ந்த நெருக்கடிகளில் வாழ்வு இருண்டு போகிறதே என தவித்த நேரம் பார்த்து எதிர்பாராத திசையில் இருந்து இனிய நல்ல சேதியோடு வந்த சூரியன் ”நலமா கவிஞரே?” என்றான்.

வாடா என்ன சேதி? இரவில் வந்திருக்கிறாயே?” என நான் ஆச்சரியப்பட்டேன்.சூரியன் சிரித்துக்கொண்டே ”நார்வேயில் இன்னும் இருளவில்லை” ஒஸ்லோ பல்கலைக் கழகத்தில் இப்பதான் ஒரு முடிவு அறிவித்தாங்க. அதுதான் ஓடோடி வந்தேன்”

“கடவுளே என்ன முடிவு சீக்கிரமாய் சொல்லடா” என் பதட்டம் உயர்ந்து சென்றது. “நல்ல முடிவுதான்” இது சூரியன். அதிகரித்த பதட்டத்தில் கெட்ட வார்த்தைகளில் கத்திவிட்டேன். “………மவனே சொல்லித் துலையடா” சூரியன் பொறுமையைச் சோதிக்கும் நிதானத்துடன் சிரித்தபடி “உங்க மகன் ஆதித்தனுக்கு ஒஸ்லோ பல்கலைக் கழகம் மானிடவியல் துறையில் கலாநிதி/முனைவர்/Phd பட்ட ஆய்வு பரிசில் கிடைத்திருக்கு.” இது 2021 வரைக்குமான கற்கை நெறி. 2021ல் என் மகனின் ஆய்வு நிறைவை காண நான் இருப்பேனோ இல்லையோ தெரியாது ஆனாலும் நுண்மதியாளனான என் மூத்த மகன் ஆய்வுகளை ஆரம்பிக்கும் நல்ல சேதி கேட்க்க வாய்த்தது என்னை மகிழ்வித்தது.

அதைச் சொல்ல வந்த தோழன் சூரியனும் நானுமாகச் சேர்ந்து , சூழ்ந்து என்னை அமுக்கிய எல்லா இருளையும் விரட்டி அடித்தோம். வாழ்க ஆதித்தன்.

எனது இரண்டாவது மகனும் தனது வரைகலை துறையில் சாதித்து வருகிறான்.

மூத்தவனுக்கு புலமைப் பரிசில் கிடைத்த சேதி கேட்டதும் முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு முதன் முதலாக என் மனைவியைத்தான் கைபேசியில் அழைத்தேன். ஏனெனில் எனக்கு ஒரு கடமை இருந்தது. யாழ்ப்பாணத்தில் ஆதித்தன் பிறந்தபோது எல்லா மோதல்கலையும் மறந்து அவனை முதலில் என்னிடம் காட்டுவதற்கே வாசுகியும் விரும்பினாராம்.

நான் அப்ப நோர்வேயில் இருந்தேன், “என்ன நடுச் சாமத்தில என்னைத் தூங்கக்கூட விடமாட்டியா” வழமைபோல கரடியாய் பாய்ந்தாள். நான் வழமைக்கு மாறாக வெண்புறாவாகச் பதில் சொன்னேன். ”வாடி வாசுகி வந்து என்னோடு இன்னும் ஆயிரம் சண்டைகள் போடு ஏன் என் கவிமனசை காயப் படுத்து நீ என்ன செய்தாலும் இனி நான் கோபப்படமாட்டேன். என் மூத்த மகனுக்குப் புலமைப் பரிசில் கிடைச்சிருக்கு. இரண்டாவது மகனும் சாதிக்கிறான். எனக்கு இது போதுமடி. நான் அவ்வப்போது சங்க காலக் கவிஞன் பாதையில் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என அலைய நீயோ வீட்டில் இருந்து என் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கித் தந்திருக்கிறாய். அது போதும். நன்றி” என சொன்னேன். மனசு நிறைந்தது.

மறு பக்கத்தில் இருந்து மூச்சு விடும் சத்தம் கூட கேட்கவில்லை.. இப்ப எனக்கு புதிய பதட்டம்.. வழமைக்கு மாறாக விட்டுக் கொடுத்து அன்பாக பேசிவிட்டேனே. திடீரென்று இப்படி பேசியிருக்கக்கூடாது. அதிர்ச்சியில மனைவிக்கு இதயம் பாதிக்கப்பட்டிருக்குமோ” என மனசு பதைத்தது.

திடீரென மறுமுறையில் இருந்து சந்தடி. ”ம் இப்பவாவது தெரிஞ்சுதே”

கைபேசியை அணைத்தேன். ”மனிதன் விதியே வாடா. வாழ்வின் எல்லா துன்பங்களையும் இதைவிட அதிக நெருக்கடிகளையும் கொண்டு வாடா..—–.உன்னால என்ன ஒரு மசிரும் புடுகேலாது”.என்று கத்திவிட்டு அக்கம் பக்கம் பார்த்து யாருமில்லையென்பதை உறுதிப் படுத்திக்கொண்டு நாவைக் கடித்தேன். என்ன இருந்தாலும் நான் இவ்வளவு கெட்ட வார்த்தைகள் பேசியிருக்கக்கூடாது. மன்னிச்சிடுங்க.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன

Leave a Response