நீயா நானா கோபிநாத்தின் நார்வே விவாத அரங்கை முன்னிறுத்தி சில குறிப்புகள்

கடந்த 27.10.2018 அன்று லில்லிஸ்டோரோம் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நோர்வே
தமிழ்ச்சங்கத்தின் 39 ஆவது ஆண்டு நிறைவுவிழாவில் ‘நீயா – நானா? புகழ் கோபிநாத்தின் தலைமையிலான விவாத அரங்கும் ஒரு நிகழ்ச்சியாக இடம் பெற்றிருந்தது.

நமது குடும்பங்களில் பிரச்சினைகள்
தீர்க்கப்படாமல் இருப்பதற்கான காரணம் தனிமனிதனா? அல்லது சமூகமா? என்பதுதான் விவாதத்துக்கான தலைப்பு.

விவாத அரங்கு ஏறத்தாழ 2 மணி நேரம் நீடித்தது. அரங்கம் ஆரவாரத்தாலும், சிரிப்பொலியாலும் நிறைந்திருந்தது.

விவாத அரங்கை சபையினர் இரசிக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்வது கடினமானதொன்றாக இருக்கவில்லை.

நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் நிகழ்ச்சி தொடர்பான பல்வேறுவகையான கருத்துகள் மக்கள் மத்தியில் இருந்து வெளிவந்தன.

கோபிநாத் சிறப்பாக நிகழ்ச்சியை நடாத்தினார். விவாதத்தில் பங்கு பற்றியோர் சரியான முறையில் பேசவில்லை.

கோபிநாத் விவாதத்தை நடத்திய முறை பங்குபற்றியோரை அவமதிப்பது போல் இருந்தது. நீயா நானா போன்ற விவாத வடிவம் மேடைநிகழ்ச்சிக்குப் பொருத்தமானதல்ல.

புலம்பெயர் சமூக விவாதங்களில், புலம் பெயர் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து ஆழமான அறிவைக் கொண்டிராத கோபிநாத் போன்ற பிரபலங்களைப் பெரும்பணம் செலவு செய்து அழைப்பது சமூகப் பொறுப்புள்ள செயல்தானா? கொடுக்கும் பணத்துக்குரிய பயனை இது தருமா?

இவை வெளிவந்த சில கருத்துகள்.

இக் குறிப்பு இவ் விவாத அரங்கின் பேசுபொருள் குறித்து சில விடயங்களைப் பதிவு செய்ய முயல்கிறது. இந்த விவாதம் சமூக விஞ்ஞானப்பார்வையில் பிரச்சினையின் மையத்தைத் தொடவில்லை என்ற எனது அவதானிப்பே இக் குறிப்பை எழுதத் தூண்டியது.

மேலும் கோபிநாத் தனது தொகுப்புரையில் சமூகத்தை குடும்பமாக வரையறுத்துக் கொண்டார். விவாத அரங்கில் வரைவிலக்கணங்களுக்குள் நாம் கட்டுண்டு போகக்கூடாதென அறிவுரை வழங்கிய அவர் சமூகத்தைக் குடும்பமாகச் சுருக்கி வரையறுத்தே தனது தொகுப்புரையை மேற்கொண்டார்.

சமூகத்தை குடும்பமாகச் சுருக்கி வரையறுப்பது நாம் பேசவந்த சமூகச் சிக்கல்களைப் புரிந்து கொள்ளத் துணைபுரியக் கூடியதுதானா? சமூக விஞ்ஞானத்தில் தனிமனிதன், குடும்பம், சமூகம் போன்றவை வேறுபட்ட கருதுகோள்களாக அணுகப்படுபவை. இவற்றுக்கிடையில் தொடர்புகளும் உறவுகளும் உண்டு.

அதேவேளை இவை தனித்துவமாகவும் அணுகப்படவும், ஆராயப்படவும் கூடியவை. தனிமனிதனின் வளர்ச்சிப் போக்கைக் குடும்பம் செதுக்குவதும் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிப் போக்கை சமூகம் செதுக்குவதும் உண்டு. அதேபோல தனிமனிதன் குடும்பத்தின் மீதும் சமூகத்தின் மீதும் தாக்கம் செலுத்துவதும் உண்டு. இந்த உறவு நிலை சிக்கல் மிகுந்தது, இலகுவான வரையறைகளுக்குள் அடைத்து விடக்கூடியவையுமல்ல.

சமூகம் சார்ந்த விடயங்களில் பதில்கள் மட்டும் முக்கியமானவையல்ல. பதில் காண்பதற்கு கடினமான கேள்விகளும் மிக முக்கியமானவை. இதனால் பதில் காண்பதற்காக கேள்விகளின் சிக்கல்களை நாம் சுருக்கி விடுதல் பிச்சினைகளின் பரிமாணங்களை நாம் புரிந்து கொள்ள உதவாது.

கோபிநாத் தனது தொகுப்புரையில் குடும்பம் என்ற நிறுவனத்துக்குள் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய பயனுள்ள விடயங்கள் பலவற்றை சபையோர் உள்வாங்கக் கூடிய முறையில் எடுத்துக் கூறினார். ஆனால் சமூகத்தை அவர் குடும்பமாகச் சுருக்கிக் கொண்டதால் சமூகம் என்ற நிறுவனம், குடும்பம் என்ற நிறுவனத்துக்குள் செலுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றி அவர் பெரிதும் பேசாமல் அதனை இலகுவாகக் கடந்து சென்றார்.

இந்த அணுகுமுறை விவாதத்தை முடித்து வைக்க அவருக்கு உதவியிருக்கக்கூடும். ஆனால் இவ் அணுகுமுறை விவாத அரங்கு தனது பேசுபொருளாக எடுத்துக் கொண்ட விடயத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறதா? இக் கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

இவ் விவாதத்துக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு சமூக விஞ்ஞானத்தில் ஒரு முக்கியமான விவாதத்துடன் தொடர்புபட்டது.

ஒரு தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமிடையில் நிலவக்கூடிய இயங்கியல் உறவு தொடர்பானது.

ஒரு தனிமனிதன் சமூகத்தின்மீது எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகிறான்?

ஒரு சமூகம் அச் சமூகத்தைச் சேர்ந்தவொரு தனிமனிதன்மீது எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகிறது?

ஓன்றையொன்று எவ்வாறு மாற்றியமைக்கத் துணை செய்கின்றன?

இந்த விவாதத்தை சமூக விஞ்ஞானத்தில் Agency vs Stucture (தனிமனிதன் – சமூகக் கட்டமைப்பு விவாதம்) என்ற விவாதமாக அடையாளப்படுத்துவர்.

இது பழமைமிகுந்ததும் இன்றுவரை சமூக விஞ்ஞானத்தில் செல்வாக்குச் செலுத்துகின்ற ஒரு விவாதமாகும். இங்கு Agency என்பதனை தனிமனித ஆற்றலாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். Stucture என்பது நாம் வாழும்
சமூகக் கட்டமைப்பைக் குறித்து நிற்கிறது.

ஒவ்வொரு சமூகக்கட்டமைப்பிலும் சில பெறுமானங்களும் விழுமியங்களும் நியமங்களும் இருக்கும்.

இவை, எது சரி அல்லது பிழை அல்லது
ஏற்கத்தக்கது – ஏற்க முடியாதது என்பதை அந்தச் சமூகத்துக்குப் போதிக்கும்.

இவற்றில் சில சமூகநீதியின்பாற்பட்டதாகவும், வேறு சில சமூகஅநீதியின்பாற்பட்டதாகவும் அமையலாம்.

இச்சமூகத்தில்வாழும் தனிமனிதர்களில் பெரும்பாலோனோர் சமூகம் போதிக்கும் பெறுமானங்ககளையும், விழுமியங்களையும் நியமங்களையும் தமக்குள் உள்வாங்கி அதன்வழி ஓழுகக் கற்றுக் கொள்வார்கள்.

இது தனிமனிதர்களின் சமூகமயமாக்கல் போக்கில் இடம் பெறும். சாதிச்சமூகக் கட்டமைப்பில், தனிமனிதர்கள் சாதிய உணர்வை தம்முள் உள்ளவாங்கிக் கொள்ளும் நடைமுறையை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

ஒரு சமூகத்தில் நிலவும் சமூகஅநீதிகளை எதிர்க்கும் தனிமனிதர்களில் ஒரு சிலர் தமது ஆற்றலால் சமூகக்கட்டமைப்பினை எதிரத்துச் செயற்பட்டு, மக்களை அணிதிரட்டி சமூகமாற்றத்துக்கு வழிகோலுவர். தமிழகத்தில் பெரியாரை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

இதனைவிட காலமாற்றமும் பண்பாட்டு வளர்ச்சியும் சமூகக்கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்திச்செல்லும்.
சமூகம் தனிமனிதனில் செல்வாக்குச் செலுத்துவதும், தனிமனிதன் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்துவதும் ஒன்றோடொன்று இணைந்த ஒரு
செயன்முறை. இருப்பினும் தனிமனிதனை விட சமூகக் கட்டமைப்பு வலுவானதாக இருக்கும்.

இதனால் சமூக்கட்டமைப்பு மீது தனிமனிதன் செலுத்தும் செல்வாக்கு வரையறைக்குட்பட்டதாகவே பொதுவாக இருக்கும்.

இது தனிமனிதர்களுக்கு மிகுந்த சவாலுக்குரிய சூழலை பலசமயங்களில் ஏற்படுத்தும். மேலும், புலம்பெயர் சூழலில் எமது சமூகக்கட்டமைப்பு எது என்பதில் குழப்பம் ஏற்படும் நிலைமைகள் உள்ளன.

பெரும்சமூகத்தின் பெறுமானங்களும் விழுமியங்களும், நமது பெறுமானங்களும் விழுமியங்களும் முரண்பட்டுக் கொள்ளும் இடங்களும் உள்ளன.

இம் முரண்பாடுகளும் குடும்பப்பிரச்சினைகளுக்குள் புகுந்து கொள்கின்றன.

நாம் மீண்டும் விவாதத்துக்கு வருவோம்.

குடும்பப்பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதற்குக் காரணம் சமூகமா? தனிமனிதனா? என்ற கேள்வி
எழுப்பப்படும் போது, இக் கேள்வியினை «தனிமனிதன் – சமூகக் கட்டமைப்பு» குறித்த விவாதத்தில் மையப்படுத்தி விவாதத்தை நகர்த்தியிருக்க வேண்டும்.

தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையே உள்ள உறவுகள், முரண்பாடுகள் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். பதில் கிட்டியிராவிடினும் முக்கியமான பல கேள்விகள் எழுப்பப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு இவ் விவாதம் வடிவமைக்கப்பட்டிருக்குமானால் மகிழ்வூட்டல் பரிமாணம்; மட்டுமின்றி அறிவூட்டல் பரிமாணமும்
இவ் விவாதத்துக்கு கிடைத்திருக்கும்.

– சர்வே

Leave a Response