
விக்ரம் நடித்த கந்தசாமி படத்துக்குப்பின் வேறு ஏதும் படங்கள் இயக்காமல் இருந்த இயக்குனர் சுசி கணேசன், பத்து வருடங்களுக்கு முன் தனது இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது தொடங்கிவிட்டார்.. இந்தப்படத்திலும் கதாநாயகன் என்கிற கணக்கில் சேராமல் வில்லத்தனம் கலந்த கதாநாயகன் மற்றும் அவருக்கே வில்லன் என இருவரும் தான் பிரதான கதாபாத்திரங்கள்.. நாயகனாக பாபி சிம்ஹாவும் வில்லனாக பிரசன்னாவும் நடிக்க இருக்கிறார்கள்..
‘பைவ் ஸ்டார்’ என்கிற படத்தின் மூலம் பிரசன்னாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் சுசி கணேசன் தான். அதனால் நீண்ட நாட்கள் கழித்து படம் இயக்க வந்திருக்கும் சுசி கணேசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்ததும் பிரசன்னா ஒப்புக்கொண்டது அந்த நன்றிக்கடனுக்காத்தான். அதே சமயம் அஞ்சாதே படத்தில் ஏற்கனவே மிரட்டலான வில்லத்தனம் காட்டியிருந்த பிரசன்னா இந்த படத்தில் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்துவார் என நம்பலாம்…
ஆமாம்.. இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது சுசி கணேசன் எடுக்க காரணம் என்ன..? “பத்து வருஷத்துக்கு முன்னால் இந்த திருட்டுப்பயல்களின் எண்ணிக்கை வருஷத்துக்கு வருஷம் கூடுகிறதே தவிர குறைகிற வழியைக் காணோம்.. சாதாரணமாக சுற்றித் திரிந்த திருட்டுப்பயல்கள் தொழில்நுட்ப திருட்டுப்பயல்களாக பதவி உயர்வு பெற்று, சிறு சிறு குற்றங்கள் தொழில் நுட்ப குற்றங்களாக பெருகிக் கொண்டிருக்கும் வேளையில், என் கற்பனையை விட சமூக சூழலே இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு மிகப்பெரிய உந்து சக்தி” என்கிறார் சுசி கணேசன்.
திருட்டுபயலே படத்தை தயாரித்த கல்பாத்தி அகோரமின் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறது.


