“மிஷ்கின் எனக்கு கிடைத்த பொக்கிஷம்” ; விஷால் பெருமிதம்..!


மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் படம் ‘துப்பறிவாளன்’. இந்தப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் விஷால் பேசியபோது, “நானும் இயக்குநர் மிஷ்கின் அவர்களும் 8 வருடமாக ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று காத்திருந்தோம். அது தற்போது துப்பறிவாளன் என்ற அருமையான படம் மூலமாக நிஜமாகியுள்ளது. மிஷ்கின் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு கிடைத்த பொக்கிஷம்” என்றார்.

மேலும், “துப்பறிவாளன் திரைப்படத்தில் என்னுடைய கேரியர் பெஸ்ட் சண்டை காட்சிகளை பார்க்கலாம். ஒரு தயாரிப்பாளராகவும் , நடிகராகவும் எனக்கு துப்பறிவாளன் பாண்டியநாடை விட முக்கியமான படமாகும். நானும், பிரசன்னாவும் சிம்ரன் அவர்களின் மிகப்பெரிய ரசிகர்கள். அவரோடு இந்த படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம்.

எனக்கு துப்பறியும் நிபுணர்களின் உடல் மொழி மிகவும் பிடித்துவிட்டது. நான் பைரசி வேலை செய்யும் நபர்களை கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியும். அவர்கள் யார் , அவர்கள் தனி நபரா அல்லது ஒரு குழுவா என்பதை இன்னும் இரண்டு வாரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பேன்” என்று கூறிய விஷால் தனது திருமணம் பற்றிய சூசகமான தகவலையும் வெளியிட்டார்.

“நான் காமராஜர் அய்யா அவர்களின் வழியில் நடப்பேன். ஆனால் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். லட்சுமிகரமான பெண்ணை கண்டிப்பாக விரைவில் திருமணம் செய்வேன். ஒட்டுமொத்த திரையுலகமே சேர்ந்து நிச்சயம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு 1௦௦வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவோம்” என்றார் நடிகர் விஷால்.

Leave a Response