கன்னடம் கற்காத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கர்நாடகத்தில் இடம் இல்லை -சித்தராமையா அதிரடி

கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற 59 கன்னடர்களுக்குப் பாராட்டு விழா பெங்களூரு காந்திபவனில் ஜூலை 19 அன்று நடைபெற்றது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு அவர்களை கவுரவித்து பேசியதாவது:–

கன்னடர்களிடம் மொழிப் பற்று குறைவாக உள்ளது என்பதற்காகவே கன்னடக் காவல் குழு அமைக்கப்பட்டது. கர்நாடகத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும். முன்பு ஒரு முறை ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், கன்னடம் கற்க முடியாது என்று கூறினார். உங்கள் சேவை போதும் என்று கூறி அவரை மத்திய அரசின் பணிக்கு அனுப்பி விட்டோம்.

கர்நாடகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கன்னடத்தைக் கட்டாயம் கற்க வேண்டும். கன்னடம் கற்காத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கர்நாடகத்தில் இடம் இல்லை. ஆட்சி நிர்வாகத்தில் கன்னடத்தை அமல்படுத்தும் நோக்கத்தில் கன்னட வளர்ச்சி ஆணையம் பணியாற்றி வருகிறது. இதை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகத்தை சேர்ந்த 59 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு சேவையாற்றச் செல்ல உள்ளீர்கள்.

இதில் பின்தங்கிய மாவட்டமான கோலாரில் இருந்து வந்த நந்தினி, நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்து, கர்நாடகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கண்பார்வை இல்லாதவர் ஒருவரும் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். நீங்கள் எந்த மாநிலத்திற்கு சென்றாலும், அங்குள்ள உள்ளூர் மொழியைக் கற்று சிறப்பான முறையில் நிர்வாகத்தை நடத்த வேண்டும். அத்துடன் கர்நாடகம், கன்னட மொழி மீது எப்போதும் பற்று வைத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் கர்நாடகத்திற்கு சேவையாற்ற வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ள நந்தினி கர்நாடக சேவைக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Leave a Response