கசிந்த உயர்மட்ட இரகசியம் – பின்வாங்கும் வலிமை முன்வரும் விஷால்

சனவரி ஏழாம்தேதி ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம் சரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஆர் ஆர் ஆர் படம் வெளியாவதாக இருந்தது. 

ஆனால், பல மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்படுகின்றன மற்றும் ஐம்பது விழுக்காடு இருக்கை என்கிற நிபந்தனைகள் நடைமுறைக்கு வருவதால் அப்படத்தின் வெளியீடு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இதனால், சனவரி 13 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் அஜீத்தின் வலிமை திரைப்படத்துக்குக் கூடுதல் திரையரங்குகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில், விஷால் நடிப்பில் தயாராகியிருக்கும் வீரமே வாகை சூடும் திரைப்படம் சனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்கிற தகவல் வருகிறது.

அதிகாரப்பூர்வமற்ற முறையில் பரவும் தகவலானாலும் அதில் உண்மை இருப்பதாகவும் விஷாலின் இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

என்ன காரணம்?

தமிழ்நாட்டில் சனவரி 10 ஆம் தேதிவரை அறிவிக்கப்பட்டிருக்கும் கொரோனா கட்டுப்பாட்டுவிதிகள் படி திரையரங்குகளில் ஐம்பது விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.

சனவரி 10 ஆம் தேதிக்குப் பிறகு இதில் மாற்றம் வருமென்பது உயர்மட்ட இரகசியமாகப் பேசப்படுகிறது.

அந்த மாற்றம் என்னவென்றால்?

சனவரி 10 க்குப் பிறகு இரவு 10 மணி முதல் காலை ஐந்து மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருமென்று சொல்லப்படுகிறது.

அப்படி வந்தால், திரையரங்குகளில் மூன்று காட்சிகள் மட்டுமே திரையிட முடியும். அதனால் வலிமை வசூலில் குறையும் அது படத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வலிமையையும் தள்ளிவைக்கும் எண்ணம் இருக்கிறதாம்.

அப்படி நடக்கும் பட்சத்தில் விஷால் படத்தை வெளியிடலாம் என்று நினைக்கிறார்களாம். அதிக திரையரங்குகளில் மூன்று காட்சிகளில் வெளியானால்கூடப் போதும் என்று விஷால் முடிவு செய்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response