சமக்கிருதத்தை திணிக்கும்மோடி. ஆங்கிலத்திணிப்பு ஜெ -விழிப்புணர்வை ஏற்படுத்தும் மக்கள் இணையம்

தமிழுணர்வாளர்கள் தமிழின் பெருமைகளை இடையறாது  பேசிக்கொண்டே இருந்தாலும் கடந்த பல்லாண்டுகளாகவே திமுக. அதிமுக அரசுகள் ஆங்கிலப்பள்ளிகள் மூலம் ஆங்கிலமயப் படுத்திக்கொண்டே இருக்கின்றன. அண்மையில் பொறுப்பேற்ற மோடி அரசு, பொறுப்பேற்ற நாள் முதல் வெறி பிடித்தாற்போல சமக்கிருதத்தை உயிர்ப்பித்து அதை இந்திய ஒன்றியமெங்கும் நிரப்பிவிடுகிற பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தச்செய்திகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் மக்கள் இணையம் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஒரு கலந்துரையாடல் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறார்  அவ்வமைப்பின் நிறுவனர் செ.ச.செந்தில்நாதன்.

அதில்.

தமிழகத்தின் வரலாற்றை மாற்றிய 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு எதிர்வரும் 2015 ஆகும். இவ்வாண்டில் மொழிப்போர் தியாகிகள் நாளான ஜனவரி 25, 2015 முதல் ஓராண்டுக்கு இந்தித் திணிப்பு எதிர்ப்பு மொழிப் போராளிகளின் நினைவை ஏந்துவதும் அந்தப் போராட்டத்தின் உயிர்ப்பிலிருந்து புதிய மொழி உரிமைப் போராட்டங்களை நடத்துவதும் காலத்தின் கட்டாயமாகிறது.

இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் நரேந்திர மோடி அரசும் ஆங்கிலத்திணிப்பு ஜெ அரசும் இன்றைய தமிழ் விரோத மொழிச்சூழலும் நம்மை அச்சுறுத்திவருகின்றன. இந்நிலையில் தமிழர்களிடையே மொழியுணர்வை மீ்ண்டும் புத்துயிர்பெற வைக்க மகத்தான இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டை நாம் கடைபிடிக்கவேண்டும்.

இதற்காக மொழி உரிமை குறித்து அக்கறையுள்ள அனைத்து அமைப்புகளும் இயக்கங்களும் தனிநபர்களும் ஒன்று சேரவேண்டியது தேவையாகும். ஜனவரி 25, 2015 இல் தமிழகமெங்கும் நினைவேந்தல்களை நடத்துவது, பிறகு ஆண்டு முழுக்க மொழி உரிமைப் போராட்டங்கள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்துவது, 1965 போராட்டத்தை ஆவணப்படுத்துவது, மொழிப்போர் தியாகியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அவரவர் ஊர்களில் கெளரவப்படுத்துவது என பல முறைகளில் இந்த ஆண்டை நாம் அரசியல்மயப்படுத்தமுடியும்.

இதற்கான கூட்டமைப்பை உருவாக்க முதல் கட்டமாக சென்னையில் இந்த ஞாயிறு காலை 11 மணிக்கு ஒரு கலந்துரையாடல் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தாங்கள் கலந்துகொள்ளவேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.

இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், 6 மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, மேற்கு கேகே நகர், சென்னை 78, பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்.

மேலதிக விவரங்களுக்கு 9884155289 ஐ அழைக்கவும்.

தொடர்ச்சியாக கோவையில் டிசம்பர் 7 இலும் மதுரையில் டிசம்பர் 14 இலும் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. தோழர்கள் விரும்பிய இடங்களில் கலந்துகொள்ளலாம். மூன்று கலந்துரையாடல்கள் முடிந்தவுடன், மீண்டும் சென்னையில் கூடி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Response