அத்துமீறி அணைகட்டும் ஆந்திர அரசு, வாழாவிருக்கும் தமிழக அரசு – சூலை 15 இல் மக்கள் போராட்டம்

சட்டப்படி தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய காவிரி நீரை “ஒரு சொட்டு நீர்கூட தர முடியாது” என கர்நாடக அரசும் அரசியல்வாதிகளும் கூறி வரும் நிலையில், சத்தமில்லாமல் பாலாற்றிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காமல் வழி செய்துள்ளது ஆந்திர அரசு!

கர்நாடகத்தில் உற்பத்தியாகி – ஆந்திரம் வழியே தமிழ்நாட்டின் வேலூருக்குள் நுழைந்து, திருவண்ணாமலை – காஞ்சிபுரம் மாவட்டங்களின் வழியே கடலில் கலக்கிறது, பாலாறு. பாலாற்று நீர் ஆந்திராவுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் கர்நாடக அரசு பல்வேறு தடுப்பணைகளைக் கட்டியுள்ள நிலையில், வெறும் 33 கிலோ மீட்டர் ஆந்திரத்திற்குள் பயணிக்கும் பாலாற்றில் இதுவரை 22 தடுப்பணைகளைக் தன் பங்கிற்குக் கட்டியுள்ளது ஆந்திர அரசு.

இதன் காரணமாக, தமிழ்நாட்டிற்குள் பாலாற்றில் நீர் வரத்து என்பது மழைக்கால வெள்ளத்தின் போது மட்டுமே என்றாகிவிட்டது. வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாலாற்று நீரைப் பயன்படுத்தி 4 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் வேளாண்மை செய்து வந்த உழவர்கள், பாலாற்றில் நீரின்றி வறட்சியின் பிடியில் சிக்கினர். அதில் கணிசமானவர்கள் பிற வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினர். அவ்வாறு வேலையின்றி வறுமையால் வாடியவர்களில் ஒரு பகுதியினர்தான், ஆந்திர வனங்களில் செம்மரக் கடத்தலுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி!

இன்றைக்கு, தமிழ்நாட்டின் பாலாற்றில் மணல் லாரிகள் மட்டும்தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. சென்னையில் நடைபெறும் முழுக் கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமின்றி, ஆந்திர நகரங்கள் மற்றும் பெங்களூர் நகரக் கட்டுமானப் பணிகளுக்குக்கூட பாலாற்றிலிருந்து அள்ளிச் செல்லப்படும் மணல் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு – பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கடைசியாக, 2006ஆம் ஆண்டு ஆந்திர அரசு, சித்துார் மாவட்டம், குப்பம் பகுதி – கணேசபுரத்தில், 0.6 ஆ.மி.க. (டி.எம்.சி.) நீரைத் தேக்கும் புதிய தடுப்பணையை கட்டவிருந்த நிலையில், அதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் 10.02.2006 அன்று வழக்குத் தொடர்ந்தது. அதன் காரணமாக அப்பணிகள் நிறுத்தப்பட்டன. ”பாலாற்றின் குறுக்கே, தடுப்பணைகளை கட்டக் கூடாது” என நடுவண் நீர்வளத்துறை ஆந்திர அரசுக்கு அறிவுறுத்தியது.

ஆனால், தற்போது கணேசபுரத்தைத் தாண்டியுள்ள வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தமிழ்நாடு – ஆந்திர எல்லைப்பகுதியான புல்லூர் கிராமத்தில், சட்டவிரோதமான முறையில் ஆந்திர அதிரடிப்படையினரை குவித்து வைத்துக் கொண்டு, ஏற்கெனவே உள்ள 5 அடி தடுப்பணையை, 12 அடியாக உயர்த்திக் கட்டியுள்ளது ஆந்திர அரசு.

1892ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கும் மைசூரு மாகாணத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் (Madras – Mysore Agreement, 1892), காவிரி, பாலாறு உள்ளிட்ட 15 ஆறுகளில் நீரின் போக்கைத் தடுக்கும் எந்தவித கட்டுமானங்களை ஏற்படுத்த வேண்டுமெனில், அதற்கு தமிழ்நாடு ஒப்புதல் அளிக்க வேண்டும் (Clause II). ஆனால், ஆந்திர அரசு இதனை மீறியே தடுப்பணை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டது.

ஆந்திரப்பகுதியிலிருந்து அவ்வப்போது வரும் பாலாற்று நீரை நம்பி – சற்றொப்ப 2,000 ஏக்கர் அளவில் அப்பகுதியின் தமிழ்நாட்டு உழவர்கள் வேளாண்மை செய்து வரும் நிலையில், புல்லூர் தடுப்பணை உயர்த்தப்பட்டுள்ளதால், இனி மழை வெள்ளக் காலங்களின் போது, எஞ்சி வரும் உபரி நீர்கூட தமிழ்நாட்டிற்குக் கிடைக்காது.

உச்ச நீதிமன்ற வழக்கால் தடுக்கப்பட்ட 0.6 ஆ.மி.க. – கணேசபுரம் தடுப்பணையைவிட, புல்லூரில் உயர்த்தப்பட்டுள்ள 12 அடி தடுப்பணை, 35 கிலோ மீட்டர் தொலைவுக்கு, 2 ஆ.மி.க. அளவில் தண்ணீரைத் தேக்கும்படி, சற்றொப்ப ரூபாய் 45 லட்சம் செலவில், இந்தப் பணிகளை ஆந்திர அரசு மேற்கொண்டது. தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துவிட்டதாகவும் சொல்கிறது ஆந்திர அரசு. ஆனால், தமிழ்நாடு அரசோ தடுப்பணை உயர்த்திக் கட்டியபிறகே விழித்துக் கொண்டது வெட்கக்கேடானது.

மேலும், தடுப்பணையின் உயரம் உயர்வதால், அதனருகில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கனகநாச்சியம்மன் கோவில் நீரில் மூழ்கும் ஆபத்து உள்ளதால், புல்லூர், திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், உழவர்களும், ஆந்திர அரசுக்கு எதிரான தன்னெழுச்சியானப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பிறகே, இந்தச் சிக்கல் வெளியுலகிற்குத் தெரிந்தது.

கடந்த 01.07.2016 அன்று, ஆந்திர அரசின் நடவடிக்கையால் ஆத்திரமுற்ற தமிழ் மக்களும் ஒருங்கிணைந்து, ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நான்கு முக்கிய சாலைகளிலும் மரங்களை வெட்டி சாய்த்து போக்குவரத்தை முடக்கினர். போராட்டம் காரணமாக தமிழ்நாடு – ஆந்திரா பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தடுப்பணைக்கு அருகிலுள்ள கனக நாச்சியம்மன் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றது. அங்குள்ள ஒரே அர்ச்சகரான சீனிவாசனுக்கு தமிழ்நாடு அரசே ஊதியம் வழங்கி வருகின்றது. இந்நிலையில், அவரை ஆந்திர அரசின் அதிரடிப்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

புல்லூர், திம்மாபேட்டை, ஆவாரங்குப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய நாட்ராம்பள்ளி பஞ்சாயத்து ஒன்றியம் சார்பிலேயே, இந்தக் கோவிலுக்கான ஊர்திகள் நிறுத்திமிடம் ஆண்டுதோறும் முறையாக ஏலம்விடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 30.06.2016 அன்று ஆந்திர அரசு, தனது கன்குன்டி கிராமப் பஞ்சாயத்தின் சார்பில், ஊர்திகள் நிறுத்துவதற்கான ஏலத்தை நடத்தியது, தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, கடந்த சூலை 2 அன்று மாலை, வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வட்டாட்சியர் பாக்கியலட்சுமி, துணை காவல்துறை கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜன், வருவாய் ஆய்வாளர்கள் சங்கீதா, அருள்மொழிவர்மன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர், தடுப்பணையை நேரில் பார்வையிட்டனர்.

சூலை 4 அன்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து தலைமையில், தருமபுரி செயலாளர்  விசயன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தூருவாசன், ஒசூர் பேரியக்க செயலாளர் முருகேசன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை ஒசூர் செயலாளர் முத்துவேலு உள்ளிட்டோர், ஆந்திர அரசு கட்டிய தடுப்பணையை நேரில் பார்வையிட்டனர்.

இந்நிலையில்,

2016 சூலை 6 அன்று மாலை, புல்லூர் ஊராட்சி மன்ற சமுதாய நலக் கூடத்தில் புல்லூர் இளைஞர்கள், உழவர்கள் மற்றும் ஊர் பொது மக்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பாலாற்றில் புல்லூர் தடுப்பணையை 12 அடியாக உயர்த்திய ஆந்திர அரசைக் கண்டிப்பது, கனக நாச்சியம்மன் திருக்கோயிலை ஆந்திராவின் பிடியிலிருந்து மீட்பது, அலசாண்டபுரத்தில் இயங்குகின்ற அக்வா ஜெல், ஏலகிரிஸ் போன்ற நிலத்தடி நீரரை உறிஞ்சும் தனியார் நிறுவனங்களை வெளியேற்றுவது ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, “பாலாற்று உரிமை பாதுகாப்பு இயக்கம்” என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன் ஒருங்கிணைப்பாளராக வழக்கறிஞர் கோ. மாரிமுத்து மற்றும் அதன் அமைப்பாளராக புல்லூர் இளைஞர் சுரேஷ் ஆகியோர் செயல்படுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

வரும் 15.07.2016 அன்று வாணியம்பாடி பொதுப்பணித்துறை அலுவலகம் முன், இவ்வமைப்பின் சார்பில், அமைப்பாளர் திரு. சுரேஷ் தலைமையில் பெருந்திரள் தமிழர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர்  து. தூருவாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றவிருக்கின்றனர்.

தமிழர்களே! உழவர்களே! அணிதிரள்வீர் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

Leave a Response