தமிழர்களைக் கொலை செய்த ஆந்திர அரசு மீது நடவடிக்கை எடுக்க ஐ நா அவையில் வலியுறுத்தல்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில் தமிழகத்திலிருந்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு தமிழர்களின் பிரச்சினைகளை ஐநாவில் பேசியுள்ளார்.
 23-06-2016 வியாழன் அன்று நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் அவர் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக, ஆந்திர அரசின் மீது 20 தமிழர் படுகொலைக்கு நடவடிக்கை கோரியும், தமிழகத்தில் நடைபெற்று வரும் சாதிய ஆணவ கெளரவப் படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோரியும் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார்.
ஐ.நா மனித உரிமைகள் அவையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் விளக்கம்:
வணக்கம்.
ஏப்ரல் 7, 2015 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள், ஷேசாச்சலம் வனப்பகுதியில் ஆந்திரகாவல்துறை, வனத்துறை மற்றும் சிறப்புப்படை ஆகியவற்றால் படுகொலை செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற மும்பை உச்ச நீதிமன்ற நீதிபதி திரு.எச்.சுரேஷ் அவர்கள் தலைமையில் செயல்பட்ட உண்மை கண்டறியும் குழு தமிழர் படுகொலையில் மேற்கூறப்பட்ட மூன்று அரசாங்க நிறுவனங்களும் அதன் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியது. இதே கருத்தை தேசிய மனித உரிமை ஆணையமும் (NHRC) கூறியது.
கொல்லப்பட்ட தமிழர்களின் உடலின் கழுத்து மற்றும் மேற்பகுதியில் குண்டடி பட்டுள்ளது. அவர்கள் அருகில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டதைக் காட்டுகின்றது. கொல்லப்பட்டவர்களின் உடலில் அவர்கள் கைகள் கட்டப்பட்டதற்கான தடங்கள் உள்ளன. மேலும் கொல்லப்பட்டவர்களின் கை, கால்கள், மூக்கு, விரல்கள் வெட்டப்பட்டும், பற்கள் உடைக்கப்பட்டும் இருந்ததாக கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பதிவு செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் ஆந்திர காவல் துறையால் அழைத்துச் செல்லப்பட்டதை நேரில் கண்டதாக சிலர் சாட்சியம் அளித்துள்ளனர்.
2002 இல் இதேபோல் 7 தமிழ்க் கூலிகள் இதே அரசு நிறுவனங்களால் கொல்லப்பட்டனர். கடந்த 15 ஆண்டுகளாக பல தமிழ் தொழிலாளர்கள் காணாமல் போவதாக தொடர்ந்து தகவல்கள் வந்துள்ளன. பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு பணிபுரியும் சூழலில் தமிழர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு காணாமலடிக்கவும் கொலையும் செய்யப்படுகின்றனர்.
ஆந்திர அரசின் புலனாய்வுக் குழு இந்த படுகொலைக்கும் அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்த பின்பும் இந்திய அரசாங்கம் நடுநிலையான ஒரு விசாரணையைத் தொடங்கத் தயாராக இல்லை. நீதி வழங்க யாருக்கும் அக்கறை இல்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகின்றது.
அதே போல் சாதி ஆணவப்படுகொலைகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வந்துள்ளதையும் நாங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம். தாழ்த்தப்பட்ட தலித் இளைஞரான ஷங்கர் சாதி இந்து வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக கொடூரமான முறையில் சமீபத்தில் கொல்லப்பட்டது உட்பட, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் குறைந்தது 81 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்தேறி உள்ளன. தாழ்த்தப்பட்ட தலித் ஆண்களோ பெண்களோ சாதி இந்து வீட்டின் பெண்களை/ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் போதுதான் இப்படிப்பட்ட கொலைகள் நடந்துள்ளன. எல்லா சம்பவங்களிலுமே பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே உள்ளனர். இப்படிப்பட்ட சாதி ஆணவப் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் இதற்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க முன்வராததால், சாதி இந்து துவேஷம் உயிர்ப்புடன் இருந்து வருகின்றது. இது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை நரகமாக்கியுள்ளது.
ஆந்திர மாநில அரச பயங்கரவாதத்திற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க தகுந்த அதிகாரிகளை நியமிக்கவும், சாதி இந்துக்களின் சாதி ஆணவ கெளரவக் கொலைகளைக் களைய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்துமாறு இந்த மன்றத்தைக் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.

Leave a Response