அகிம்சை தத்துவத்துக்கு எதிராக இந்தியா இருக்கலாமா? – பிரியங்கா கண்டனம்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் போரை நிறுத்த ஐ.நா.சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் உருக்குலைந்துள்ள காசாவில் பலி எண்ணிக்கை 7000ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் ஐ.நா.வில் ஜோர்டான் கொண்டு வந்த தீர்மானத்தில் காசாவில் முடக்கப்பட்டுள்ள உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசியச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கான அவசரத் தேவையை உணர்ந்து, மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்கு 120 நாடுகள் ஆதரவாகவும் 14 நாடுகள் எதிராகவும் இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமல் தவிர்த்தன.இதையடுத்து இந்தத் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டது.

பிரிக்ஸ் நாடுகள் பட்டியலில் உள்ள பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், இந்தியா மட்டும் புறக்கணித்ததற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்தியாவின் செயல் வெட்கக்கேடானது என்று காங்கிரசு பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்துக் கூறுகையில்….

காசாவில் போர் நிறுத்தத்திற்கு வாக்களிப்பதில் இருந்து நமது நாடு விலகியிருப்பது எனக்கு அதிர்ச்சியும் வெட்கமும் அளிக்கிறது. நமது நாடு அகிம்சை மற்றும் உண்மையின் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது. நமது சுதந்திரப் போராளிகள் தங்கள் இன்னுயிர்களை இந்தக் கொள்கைகளுக்காகத் தியாகம் செய்திருக்கிறார்கள். மனிதகுலத்தின் ஒவ்வொரு சட்டமும் தூள் தூளாக்கப்படுவதையும், உணவு, தண்ணீர், மருத்துவப் பொருட்கள், தகவல் தொடர்பு, மின்சாரம் போன்றவை இலட்சக்கணக்கான மக்களுக்குத் துண்டிக்கப்படுவதையும், பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அழிக்கப்படுவதையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டு நிற்பது இந்தக் கொள்கைகளுக்கு எதிரானது. மனிதாபிமான போர் நிறுத்தத் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது அவமானகரமானது

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response