காசா மீது தரை மற்றும் வான்வழியாக இஸ்ரேல் விடிய விடிய குண்டு ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்திய நிலையில், காசாவில் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறி உள்ளது.
தெற்கு இஸ்ரேல் பகுதி மீது ஹமாஸ் படையினர் கடந்த 7 ஆம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அதன்பின் இஸ்ரேல் இராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால் போர் மூண்டது.
இதன்விளைவாக பல்லாயிரக்கணக்கானோர் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இந்தப் போர் தற்போது 3 ஆவது வாரமாக நீடிக்கிறது.
நேற்று முன்தினம் முதல் முறையாக காசா நகருக்குள் பீரங்கிப் படைகளுடன் நுழைந்த இஸ்ரேல் இராணுவம், அதன் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது. அதே நேரம், காசா பகுதி முழுவதும் 250க்கும் மேற்பட்ட இடங்களில் வான்வெளித் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதிகளில் இருந்த பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரைமட்டமாகின. இதுவரை காசாவில் மட்டும் 7000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று கவலை தெரிவித்துள்ள ஐ.நா., மனிதாபிமான உதவிகள் வழி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இதற்காக ஐ.நா.வில் ஜோர்டான் கொண்டு வந்த தீர்மானத்தில் காசாவில் முடக்கப்பட்டுள்ள உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசியச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கான அவசரத் தேவையை உணர்ந்து, மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் வெறுக்கத்தக்க வகையில் இருப்பதாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தத் தீர்மானத்திற்கு 120 நாடுகள் ஆதரவாகவும் 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமல் தவிர்த்தன.இதையடுத்து இந்த தீர்மானம் ஐ.நா.பொது சபையில் நிறைவேற்றப்பட்டது.