கொத்து குண்டுகள் வீசி தமிழ்மக்கள் கொல்லப்பட்டதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் – த தே கூ வேண்டுகோள்

ஈழத்தில் 2009 இல் நடந்த யுத்தத்தின் போது சிங்களப் படையினர், சர்வதேச போர் விதிமுறைகளை மீறும் வகையில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட த கார்டியன் ஊடகம் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது பற்றி அவர், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சர்வதேச போர் விதிமுறைகளை மீறும் வகையில் அரச படையினர் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.

இதற்கான ஆதாரங்களை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் த கார்டியன் ஊடகம் வெளிப்படுத்தியுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இலங்கையில் ஆட்சியில் இருந்தவர்கள், படைத்துறை உயரதிகாரிகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கும் இந்த ஆதாரங்கள், கடும் நெருக்கடிகளை ஏற்படுத்துமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றபோது அரசாங்கத்தால் போர் தவிர்ப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகளும் அதன் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற போது இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட போர் தவிர்ப்பு வலயங்களில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் இருந்துள்ளனர்.

இறுதிக்கட்ட போரின்போது இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிது காலம் தற்காலிகமாக படைத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

அத்துடன், கோத்தபய ராஜபக்ச படைத்துறைச் செயலாளராகவும், அமைச்சர் சரத்பொன்சேகா படைத்தளபதியாகவும் இருந்துள்ளனர்.

சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை இனங்கண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆய்வாளர் ஒருவர் இங்கு வீசப்பட்ட கொத்துக்குண்டுகள் ரஷ்ய நாட்டுத் தயாரிப்பு என உறுதிப்படுத்தியுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது போரில் ஈடுபட்ட இருதரப்பினராலும் போர்க்குற்றங்களும் மனிதவுரிமை மீறல்களும் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் குற்றம் சுமத்தியிருந்தன.

ஆயினும் அதனை முன்னைய அரசாங்கம் மறுத்திருந்தது. சர்வதேச யுத்த நியமங்களின்படியே தமது படையினர் போரை நடத்தியிருந்ததாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்போது கூறியிருந்தார் என அச்செய்தியில் ஆதாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

ஆகையினால், தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை உயர்பாதுகாப்பு வலயங்களிலுள்ள தமிழ் மக்கள் மீது வீசப்படும்போது தற்போதைய ஆட்சியாளர்களும் அதில் பங்காளிகளாக உள்ளார்கள்.

எனவே, இது தொடர்பில் தற்போதுள்ள அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

Leave a Response