சிங்கள இராணுவத்தின் பிடியில் இருக்கும் விவசாயப் பண்ணைகளை ஒப்படைக்கவேண்டும் – தமிழ் அமைச்சர் கோரிக்கை

 

வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் சிங்கள விவசாய அமைச்சர் துமிந்த திசநாயாக்காவுக்கும் இடையில் சந்திப்பு  நடந்துள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள   வடக்கு விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது சிங்கள விவசாய அமைச்சர் துமிந்த திசநாயாக்கா வடக்கின் விவசாயத் தேவைகள் குறித்து அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கேட்டறிந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இச்சந்திப்பு பற்றி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கருத்துத் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தின் விவசாய அபிவிருத்தியில் நாம் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து மத்திய அமைச்சரிடம் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இதில் பிரதானமாக இலங்கை விவசாய சேவையில் எங்களுக்கு 22 ஆளணிகள் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதும் 5 பேர் மாத்திரமே தற்போது சேவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி தற்போது 17 பேரை நியமிப்பதற்கு ஆவன செய்யுமாறும், இதற்காக தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்குத் தனியான ஒரு பரீட்சையை நடாத்துமாறும் கேட்டிருக்கின்றோம். இது தவிர விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களின் வெற்றிடம் நீண்டநாட்களாக நிரப்பப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.

வட்டக்கச்சி விதை உற்பத்திப் பண்ணையில் பெரும்பகுதி இன்று படையினர் வசமே உள்ளது. இதனை விடுவித்துத் தருமாறும், இராணுவத்தின் வசமுள்ள கிளிநொச்சி சேவைக்காலப் பயிற்சி நிலையம் மற்றும் வெள்ளாங்குளப் பண்ணையையும் எம்மிடம் கையளிக்குமாறும் கோரியுள்ளோம்.

இலங்கையில் சின்ன வெங்காயம் இன்று வடக்கிலேயே அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அறுவடை காலத்தில் இந்தியாவில் இருந்து அதிகளவு வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால் எமது விவசாயிகளுக்கு சந்தையில் வெங்காயத்துக்கு உரியவிலை கிடைக்காமல் போகின்றது. இதனால், இறக்குமதி வெங்காயத்துக்கு அதிக வரி விதிக்குமாறும் இதற்கு நிரந்தரத் தீர்வொன்றைக்காண வேண்டும் என்றும் கோரியுள்ளோம். மத்திய அமைச்சர் உரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பதாகக் கூறிச் சென்றிருக்கிறார்.

அத்தோடு இலங்கையில் உலக வங்கியின் நிதி உதவியுடன் ஒவ்வொன்றும் 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 7 விவசாயப்பூங்காக்கள் இலங்கையில் நிறுவப்பட இருப்பதாகவும், வடக்கில் அதன் அமைவிடம் தொடர்பாக எங்களுடன் கலந்து பேச உள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப்பணிப்பாளர்கள் அ.செல்வராசா, தெ.யோகேஸ்வரன், அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன், பொ.அற்புதச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Leave a Response