கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பராமரிப்பை உடனே தொடங்குங்கள் – அதிமுக அரசுக்கு தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை

கன்னியாகுமரியில் கடல் நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை அமைந்துள்ளது. இதனை படகுகளில் சென்று சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.

திருவள்ளுவர் சிலை, கடந்த  1.1.2000ம் ஆண்டில் அன்றைய முதல்வர் கருணாநிதியால்  திறக்கப்பட்டது. கடல் நடுவே இருப்பதால், உப்புக் காற்றால் சேதம் அடைந்து வந்தது. இதனால் சிலையின்மேல் `சிலிக்கான்’ என்ற இரசாயன கலவை பூசப்பட்டது. ஒருமுறை பயன்படுத்தினால் 3 ஆண்டுகளுக்கு சிலையின் தன்மை மாறாமல் இருக்கும். அதன்படி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இரசாயன  கலவை பூசப்பட்டு வந்தது.

இந்தப் பணியை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்  கழகம் மேற்கொண்டு வந்தது. ஆனால், அ.தி.மு.க. அரசு அமைந்தபிறகு குறித்த காலத்திற்குள் இரசாயன கலவை  பூசப்படுவதில்லை. இதனால் சிலை சேதம் அடைந்தது. இதைக்கண்டித்து, திமுக சார்பில் 2013 சனவரி மாதம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அவசரம் அவசரமாக  இரசாயன கலவை பூசப்பட்டது.

தற்போது, இந்த ஆண்டுடன் 3 வருடம் நிறைவடைவதால் மீண்டும் இரசாயன கலவை பூச வேண்டும். இதற்கான காலமும் நெருங்கி விட்டது. ஆனால் இப்போதே சிலையில் வெடிப்புகள் காணப்படுகின்றன. வரும் டிசம்பருக்குள் இரசாயன கலவை  பூச வேண்டியது  கட்டாயமாகிறது. திருவள்ளுவருக்கு உரிய மரியாதையைச் செலுத்தும் வண்ணம் அதன் பராமரிப்புப் பணிகளை இப்போதே  தொடங்கினால்தான் குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க  முடியும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடனடியாக இதற்கான பணிகளைத் தொடங்குவதுதான் அதிமுக அரசுக்கு நல்லது.

Leave a Response