பறிபோகும் தமிழக அரசு மருத்துவக்கல்லூரி உயர்படிப்புகள் – அபாய எச்சரிக்கை செய்யும் மருத்துவர்

மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள DM ,MCh போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை , இந்தியா முழுவதுக்குமான பொதுப் போட்டி இடங்களாக உச்ச நீதிமன்றம் மாற்ற முயல்வதை தடுத்திட மத்திய அரசு சட்டம் கொண்டுவரவேண்டும் என தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

இது குறித்து சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகச் செய்தி.

தமிழகம் மருத்துவக் கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2800 க்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவ இடங்களும், 1200 க்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களும் 189 உயர் சிறப்பு மருத்துவ இடங்களும் உள்ளன. இந்தியாவில் பத்து மாநிலங்களில் உயர் சிறப்பு மருத்துவ இடங்களே இல்லை.பல்வேறு மாநிலங்களில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மக்களின் கோடிக் கணக்கான ரூபாய் வரிப் பணத்தை செலவு செய்தே இந்த மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப் பட்டுள்ளன. தமிழக மக்களின் நலன் கருதி பொது மருத்துமனைகளை வலுப்படுத்திட , அதிகமான நிதியை செலவு செய்து, கடுமையான உழைப்பையும் செலுத்தியே ஒவ்வொரு உயர்சிறப்பு மருத்துவ இடத்தையும் தமிழகம் தொடங்குகிறது.

.ஆனால் ,அதன் பலன்களை முழுமையாக நாம் அனுபவிக்க முடியாத நிலையே கடந்த 30 ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில் நமது உரிமைகள் மேலும் மோசமாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

1985 –ல் உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட அகில இந்திய தொகுப்பு நமது நலன்களுக்கு வேட்டு வைத்துள்ளது. இளநிலை மருத்துவ இடங்களில் 15 விழுக்காட்டையும், முது நிலை மருத்துவ இடங்களில் 50 விழுக்காட்டையும் அகில இந்திய தொகுப்பிற்கு நாம் அளித்து வருகிறோம். நாம் வழங்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப , அகில இந்திய தொகுப்பிலிருந்து தமிழக மாணவர்கள் இடங்களைப் பெறுவதில்லை.

பின்தங்கிய தங்கிய மாநிலங்களுக்கும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் உதவ வேண்டும் என்ற காரணத்தைக் கூறியே அகில இந்திய தொகுப்பு உருவாக்கப்பட்டது .30 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அகில இந்திய தொகுப்பு தொடங்கப்படதற்கான நோக்கம் நிறைவேற வில்லை. வட கிழக்கு மாநில மாணவர்களும் அதிகம் பயன் பெறவும் இல்லை. வளர்ச்சியடைந்த வேறு மாநிலத்தவர்களே நமது இடங்களை அபகரிக்கின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத அல்லது அதிகம் இல்லாத மாநிலங்களில் ,குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் போதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க எந்த நடவடிக்கைகளையும் மத்திய – மாநில அரசுகள் எடுக்கவில்லை. ஆனால், அதே காலக்கட்டத்தில் , நமது தமிழகம் அதிக மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி வந்துள்ளது. இருப்பினும் , அக்கல்லூரிகளில் நாம் உருவாக்கி உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நம்மால் முழுமையாக பயன் படுத்திக் கொள்ள முடியவில்லை. உச்ச நீதி மன்றத்தின் தலை ஈட்டால், கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத கதையாக உள்ளது. இதனால் தமிழகத்திற்கு பேரிழப்பு ஏற்படுகிறது.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர்சிறப்பு மருத்துவ இடங்களில் ஒட்டு மொத்த இடங்களையும் தமிழகத்தினரே படிக்கமுடியும், வேறு மாநிலத்தவர் படிக்க முடியாது. என்ற நிலை தற்பொழுது உள்ளது.

இந்த நிலையில் , தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள டி.எம், எம்.சி.எச் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளையும், பிற மாநிலத்தவற்கு தாரை வார்க்க வேண்டிய நிலையை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தி உள்ளது.இளநிலை மற்றும் முதுநிலை போன்று ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டு இடங்களை வழங்குவது போல் அன்றி, உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் ஒட்டு மொத்த இடங்களையும் , இந்தியாவுக்குமான பொது இடங்களாக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் நமது உயர் சிறப்பு மருத்துவ இடங்களை தமிழக டாக்டர்களுக்கென மட்டும் ஒதுக்கீடு செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அதாவது, தமிழகத்திற்கு சொந்தமான இடங்களை, ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் சொந்தமான இடமாக, பொதுப் போட்டி இடமாக மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகம் மிகவும் பாதிக்கப்படும்.

ஏனெனில்,

· உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளது.

· அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் இந்த படிப்புகளில் சேர்ந்து படிக்க முடிகிறது.

· படிப்பை முடித்ததும் அரசு மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து பணிபுரிகின்றனர்.

· இதனால் அரசு மருத்துவ மனைகளின் சேவைத் தரம் உயர்கிறது.

· உயர் சிறப்பு மருத்துவ நிபுணர்களின் சேவை ஏழை நோயாளிகளுக்கு கிடைக்கிறது.

· தமிழக அரசின் மருத்துவத் துறை வலுப்பெறுகிறது.

இவை அனைத்தும் பாதிக்கப்படும்.

இந் நிலையில் உச்ச நீதிமன்றம் தமிழக நலன்களை பாதிக்கும் வகையில் உத்தரவை பிறப்பித்துள்ளது கவலையளிக்கிறது.

தமிழக அரசின் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அகில இந்தியாவிற்கும் பொதுவாக மாற்றினால்,

· அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவர்.

· ஏழை நோயாளிகளுக்கு அரசு மருத்துவ மனைகளில் கிடைத்து வரும் உயர்சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காமல் போய்விடும்.

· தமிழக அரசு மருத்துவ மனைகள் பாதிக்கப்படும்.

· பேராசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும்.

· பல புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதிலும், சிறப்பாக செயல்படுவதிலும் சிரமம் ஏற்படும்.

· தமிழக மக்களின் வரிப் பணத்தில் உருவான மருத்துவக் கல்லூரிகளால் தமிழக மக்களுக்கு பயன் கிடைக்காமல் போய்விடும்.

· தமிழக மருத்துவர்கள் பாதிக்கப்படுவர்.

· அரசு மருத்துவர்கள் பாதிக்கப்படுவர்.

· பெண் மருத்துவர்கள் பாதிக்கப்படுவர்.

எனவே,

· உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கக் கூடாது.

· தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் யாவும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உரியதாக்கிட வேண்டும்.

· உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் அந்த அந்த மாநில டாக்டர்களுக்கு மட்டுமே உரியது என்ற நிலையை உறுதிப்படுத்திட சட்டம் கொண்டுவர மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என தமிழக அரசை சமூக சமத்துவதற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் 19.11.2015 அன்றே ,சென்னையில் நடத்தப்பட்டக் கருத்தரங்கில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டதுடன் ஆதரவும் தெரிவித்தனர்.

இந்த பிரச்சனையில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,

டாக்டர்.ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
கைபேசி- 9940664343

Leave a Response