புற்றுநோயாளிகளுக்கு மறுவாழ்வு – நடிகை கெளதமி நடத்தும் தொண்டுநிறுவனம்

நடிகர் கமலின் மனைவியும் நடிகையுமான கெளதமி, வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையைச் சந்தித்து மீண்டவர் என்பது தெரிந்த செய்தி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்ட அவர், தாம் பெற்ற துன்பத்தை வேறு யாரும் பெறக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில்  ‘லைஃப் அகைன்’ என்னும் புற்று நோயாளிகளுக்கான தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார்.      
 
முன்பெல்லாம் புற்றுநோய் தாக்கியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் இன்றைக்கு  புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாகவும், உலக அளவில் பாதிக்கப்படும் புற்று நோயாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் இருப்பதாகவும் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அப்படி புற்று நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு சிறந்த மறுவாழ்வு மையமாக உருவாகியுள்ளது கௌதமி துவங்கி உள்ள ‘லைஃப் அகைன்’ என்னும் தொண்டு நிறுவனம்.
 
அண்மையில்  சென்னை ராயப்பேட்டையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கௌதமி, “புற்று நோய் என்பது வாழ்வின் முடிவல்ல. அதற்குப் பின்னும் வாழ்க்கை இருக்கிறது என்பதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டு” என்று கூறினார்.  
கடந்த பத்து ஆண்டுகளாக புற்று நோயுடன் போரிட்டு  வாழ்ந்து கொண்டிருப்பவர் கௌதமி  என்பது குறிப்பிடத்தக்கது.  “அப்படி புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிகளுக்கும் எங்களின் ‘லைஃப் அகைன்’ தொண்டு நிறுவனம், சிறந்த மறு வாழ்வு மையமாக விளங்கும். வெறும் சிகிச்சை மட்டுமில்லாமல்,  வாழ்க்கையின் முக்கியத்துவம், தன் நம்பிக்கை, மன உறுதி, புற்று நோயை எதிர்த்துப் போராடும் மன வலிமை என பல சிறப்பு குணங்களை அவர்களுக்கு வழங்கி, அவர்களை மனதளவில் வலிமைப் படுத்துவதே ‘லைஃப் அகைன்’ நிறுவனத்தின் தலையாய கடமை. என்னோடு இந்த ‘லைஃப் அகைன்’  நிறுவனத்தில் கைக்கோர்த்துள்ள மாலா மண்யன், டாக்டர் ஹைமாவதி ஆகியோரும் தங்களின் சிறப்பான பணியை செய்து வருகின்றனர்..”
 
“மாணவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் என அனைவரும் தங்களால் முடிந்த அளவு ‘லைஃப் அகைன்’ தொண்டு நிறுவனத்தை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ‘லைஃப் அகைன்’ தொண்டு நிறுவனத்தை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும் சக்தி  ஊடகங்களுக்கு தான் உள்ளது. உங்களால் இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு புற்று நோயாளியின் வாழ்க்கை காப்பாற்றப்படும்…” என்று கூறினார் நடிகையும் லைஃப் அகைன்’  தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமான கௌதமி

 

Leave a Response