
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.தற்போது நடந்து முடிந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 108 இடங்களைப் பிடித்துள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதிக இடங்களில் வெற்றிபெற்ற கட்சி என்ற முறையில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க முயலும். ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 118 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும்.
தற்போது தவெக 107 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளது. இதில் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.இதனால், ஆட்சி அமைக்க கூடுதலாக 12 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும்.
எனவே, திமுக அல்லது அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற விஜய் முயற்சி செய்வார் எனச் சொல்லப்படுகிறது.
இன்று அல்லது நாளை தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது.இதில், தவெக சட்டமன்றக் கட்சியின் தலைவராக விஜய்யை தேர்வு செய்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டு கடிதம் கொடுப்பார்கள்.
அந்தக் கடிதத்தை வைத்துக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் விஜய். ஆளுநரும் அதிக இடங்களைப் பிடித்த கட்சி என்ற அடிப்படையில், விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பதுடன், ஒரு சில நாட்களில் தமிழ்நாடு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடுவார்.
அதன்படி,ஆளுநர் குறிப்பிட்ட நாளில் சட்டப்பேரவையில் 118 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதை விஜய் நிரூபிக்க வேண்டும்.
ஒருவேளை, பெரும்பான்மைக்குத் தேவையான 118 பேர் ஆதரவு இல்லை என்றால் அவரது ஆட்சி உடனடியாகக் கவிழும் ஆபத்தும் உள்ளது.
இந்நிலையில்,இந்தச்சூழலை விஜய் எப்படி சமாளிக்கப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இதற்கான விடை இன்னும் ஒரு சில தினங்களில் தெரியும்.
– கரன்


