
புதுச்சேரியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்தியங்கள் உள்ளன. இதற்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்றது.
அங்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும்போட்டி நிலவியது.
என்டிஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசு, பாஜக, அதிமுக, புதிதாக உருவான இலட்சிய ஜனநாயகக் கட்சி
உள்ளிட்டவை இடம்பெற்றன.
இந்தியா கூட்டணியில் காங்கிரசு – திமுக இடையே ஏற்பட்ட மோதலால் தொடக்கம் முதலே பெரும் குழப்பம்
நிலவியது. திமுக போட்டியிட்ட 5 தொகுதிகளில் காங்கிரசு வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டனர்.இடதுசாரிகள்
தனித்துப் போட்டியிட்டன.விசிகவுக்கு ஒதுக்கிய தொகுதியில் காங்கிரசு, இடதுசாரிகள் போட்டியிட்டன.
இந்நிலையில், புதுச்சேரியில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.புதுச்சேரியில் தொடக்கம் முதலே
என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்தது.
முதல்சுற்றில் 17 தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டன.இதில்தட்டாஞ்சாவடியில் என்.ஆர்.காங்கிரசு நிறுவனர் இரங்கசாமி,முத்தியால்பேட்டையில் வையாபுரி மணிகண்டன்,ஏனாமில் மல்லாடி கிருஷ்ணாராவ்,
அரியாங்குப்பத்தில் அய்யப்பன்,நெட்டப்பாக்கத்தில் பேரவைத் துணைத்தலைவர் ராஜவேலு,வில்லியனூரில்
இரவிக்குமார்,ஏம்பலத்தில் மோகன் தாஸ்,காரைக்கால் வடக்கில் அமைச்சர் திருமுருகன்,லாஸ்பேட்டையில்
சிவக்கொழுந்து ஆகியோர் வென்றனர்.
மண்ணாடிப்பட்டில் பாஜக வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம்,நிரவி டி.ஆர்.பட்டிணத்தில் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வென்றனர்.உப்பளம் தொகுதியில் அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் வென்றார்.காங்கிரசுக்
கட்சியில் ஊசுடு தொகுதியில் கார்த்திகேயன் வென்றார்.நெல்லித்தோப்பில் திமுக வேட்பாளர் கார்த்திகேயன்
வென்றார்.
சுயேச்சைகளில் மாஹேயில் அசோக்குமார், நெடுங்காட்டில் விக்னேஷ்வரன்,கதிர்காமத்தில்
அழகு(எ)அழகானந்தம் ஆகியோர் வென்றனர்.
இதைத்தொடர்ந்து 2 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை 13 தொகுதிகளில் நடைபெற்றது.அதிலும் என்டிஏ
கூட்டணியே முன்னிலை பெற்றது.இக்கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசில் மங்கலம் தொகுதியில் இரங்கசாமி, உழவர் கரையில் நாராயணசாமி,இந்திரா நகரில் ஏகேடி ஆறுமுகம் வெற்றி பெற்றனர்.பாஜகவில்
முதலியார்பேட்டையில் ஜான்குமார்,திருநள்ளாறில் ஜிஎன்எஸ் ராஜசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.காமராஜ் நகரில் லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வென்றார்.முதலமைச்சர் இரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் வென்றுள்ளார்.
இந்தியா கூட்டணியில் திமுகவில் காரைக்கால் தெற்கில் நாஜிம், பாகூரில் செந்தில்குமார், காலாப்பட்டில் செந்தில், ராஜ்பவனில் விக்னேஷ் கண்ணன் ஆகியோர் வென்றனர்.
மணவெளி தொகுதியில் இராமு,திருபுவனையில் சாய் சரவணன் ஜெ குமார் ஆகியோர் தவெக சார்பில்
போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நேயம் மக்கள் கழகத்தின் தலைவர் நேரு உருளையன்பேட்டையில் வெற்றி பெற்றார்.
என்.ஆர்.காங்கிரசு 12, பாஜக 4, அதிமுக 1, லஜக 1 என 18 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும்
என்டிஏ கூட்டணி ஆட்சியமைக்கிறது.கூட்டணித் தலைவர் இரங்கசாமி 5 ஆவது முறையாக முதல்மைச்சராகிறார்.
திமுக 5 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாகிறது. காங்கிரசு ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது. வெற்றி பெற்ற 3 சுயேச்சைகளில் 2 பேர் என்டிஏ கூட்டணிக்கு நெருக்கமானவர்கள்.அதனால் இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது.


