இரண்டாக உடைந்தது அதிமுக – தொண்டர்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பல தொகுதிகளில் அக்கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டதோடு,பல முக்கிய வேட்பாளர்கள் கட்டுத்தொகை இழந்தனர்.இதனால் கட்சிக்குள் கடும் அதிருப்தி உருவாகியுள்ளது.

பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து 11 ஆவது தோல்வியைப் பெற்றுள்ளது.இதனால் தோல்விக்கான முழுப்பொறுப்பையும் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொண்டு,அவர் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகவேண்டும் என்று அதிமுக முன்னணி தலைவர்கள் கடந்த ஒரு வாரமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,கடந்த மூன்று நாட்களாக சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் தீவிர ஆலோசனைகள் நடந்தன.இதில் எஸ்.பி.வேலுமணி,சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அதிமுகவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 47 சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் 30 பேர் என்றும் இல்லையில்லை 24 பேர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி அணிக்கு ஆதரவாக இருப்பதாகவும் தகவல்கள் பரவின.

அதிமுக உள்கட்சி மோதல்,புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நாளிலேயே வெளிப்படையாக வெடித்துள்ளது.சட்டசபைக்கு அதிமுக சமஉக்கள் இரண்டுஅணிகளாக வந்த சம்பவம்,கட்சிக்குள் அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதைக் காட்டியுள்ளது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமஉக்களின் பதவியேற்பு விழா நேற்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவைக் கூடத்தில் நடந்தது. இதில் அதிமுகவின் உள்கட்சி பிரச்னை அனைவருக்கும் வெளிப்படையாக தெரியும் வகையில் அரங்கேறியது.

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி காலை 9.15 மணியளவில் சட்டசபைக்கு வந்தார்.ஆனால், வழக்கமாக அவருடன் வரிசையாக வரும் சமஉக்கள் பலர் அப்போது அவருடன் இல்லை.அவருடைய ஆதரவாளர்களாகக் கருதப்படும் 17 சமஉக்கள் மட்டுமே வந்திருந்தனர்.

இதற்கு மாறாக,முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றொரு பெரியஅணியாக அதிமுக சமஉக்கள் காலை 9.25 மணியளவில் சட்டசபைக்கு வந்தனர்.

அதிமுகவில் மொத்தம் 47 சமஉக்கள் உள்ள நிலையில், சட்டமன்றக் கட்சித்தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை நியமிக்க வேண்டும் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மரகதம் குமரவேல், தளவாய் சுந்திரம், கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்ட 17 சமஉக்கள் கையெழுத்திட்ட கடிதம் சபாநாயகரிடம் நேற்று வழங்கப்பட்டது என்றும் 23 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்றும் இரண்டுவிதமான தகவல்கள் இருக்கின்றன.அதில்,அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும், கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் செயல்படுவர் எனக் கூறப்பட்டிருந்தது.

அதன்பின்,மாலை 6.05 மணிக்கு எஸ்.பி.வேலுமணி தலைமையில் சி.வி.சண்முகம், நத்தம் விசுவநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ் உள்ளிட்ட 30 அதிமுக சமஉக்கள் சபாநாயகரிடம் ஒரு கடிதம் வழங்கினர். அந்தக் கடிதத்தில் எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராகவும், சட்டமன்றக்கட்சித் துணைத் தலைவராக ஹரி,கொறடாவாக சி.விஜயபாஸ்கரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதன் மூலம்,அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியாகவும் செயல்படுவது வெளிப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதுடன், அதிமுக இரண்டாக உடைந்துள்ளது உறுதியாகி உள்ளது.

ஏற்கெனவே, தேர்தல் தோல்வியால் துவண்டு போயிருக்கும் அக்கட்சித் தொண்டர்கள், இப்போது கட்சி இரண்டாகப் பிளவுபட்டிருப்பதால் கடும்அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Leave a Response