
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் 10 உறுப்பினர்கள் உள்ளனர்.
கட்சியின் முக்கியத் தலைவரான ராகவ் சத்தா, அக்கட்சியின் மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்து
வந்தார்.சமீபத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டு,அவருக்கு பதிலாக அசோக் மிட்டல்
நியமிக்கப்பட்டார்.
இந்தச்சூழலில்,கடந்த சில வாரங்களாகவே,கட்சித் தலைமைக்கும் ராகவ் சத்தாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.இந்நிலையில்,அவர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைவதாக நேற்று அறிவித்தார். அவருடன்,அக்கட்சியின் மேலும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களும் பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளனர்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் ராகவ் சத்தா நேற்று கூறியதாவது….
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களில் மூன்றில் 2 பங்கினர் பாஜகவில் இணைய முடிவு
செய்துள்ளோம்.என்னுடன் சேர்ந்து ஸ்வாதி மாலிவால், ஹர்பஜன் சிங், சந்தீப் பதக், அசோக் மிட்டல், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி என மொத்தம் 7 உறுப்பினர்கள் ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறி உள்ளோம்.
எனது வாழ்வின் 15 ஆண்டுகளை ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தேன். ஆனால், நேர்மையான அரசியலை முன்னிறுத்தித் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், தற்போது அந்தப் பாதையில் இருந்து விலகிவிட்டது. நியாயமான மனிதனாகிய நான் தவறான, நேர்மை இல்லாத ஒரு கட்சியில் இருந்ததை இப்போது உணர்கிறேன். எனவே, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி மக்களுக்காகப் பணியாற்ற முடிவெடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
7 பேரும் கையெழுத்திட்ட கடிதத்தை மாநிலங்களவைத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணனிடம் அவர்
சமர்ப்பித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த அவர்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நவீன், இனிப்பு வழங்கி வரவேற்றார்.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 10 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில், அங்கிருந்து 7 பேர் விலகி பாஜகவில் இணைவது, ஆம் ஆத்மிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு கட்சியின் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் விலகி, வேறொரு கட்சியில் இணைந்தால் மட்டுமே அவர்களின் பதவி பறிபோகாது. இந்த நிலையில், தற்போது மூன்றில் 2 பங்கு
உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் விலகியுள்ளதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச்சட்டம் பாயாது.
இதற்கிடையே, ராகவ் சத்தா, அசோக் மிட்டல், சந்தீப் பதக் ஆகிய 3 பேரையும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவைத் தலைவரிடம் கடிதம் அளிக்க உள்ளதாக அக்கட்சியின் மற்றொரு மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா,தேசியவாத காங்கிரசு ஆகிய கட்சிகளை இரண்டாக உடைத்தது பாஜக.சிவசேனா கட்சியில் இருந்து மூத்ததலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களை வெளிவரச்செய்து அவரை முதலமைச்சர் ஆக்கியது. இதனால் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை இழந்தார்.
அதேபோல் சரத்பவார் தலைமையில் செயல்பட்ட தேசியவாத காங்கிரசுக் கட்சியை சமீபத்தில் விமான விபத்தில் மறைந்த அவரது உறவினர் அஜித்பவாரை வைத்து உடைத்து அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியது.
அந்தவழியில் தற்போது டெல்லி முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியையும் பா.ஜ.க உடைத்துள்ளது. அந்தக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மாலிவால் பா.ஜ.க வுடன் இணக்கமாகச் செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் ஆம்ஆத்மி கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதாவையும் வளைத்துப்போட்டு அவர் மூலம் ஆம்ஆத்மி கட்சியை இரண்டாக உடைத்துள்ளது பாஜக என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்நிகழ்வு தில்லி மற்றும் பஞ்சாப் அரசியலரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


